2016-06-07 16:19:00

ரியோ ஒலிம்பிக்கில் புலம்பெயர்ந்த வீரர்கள் பங்கேற்பு


ஜூன்,07,2016. பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜெனெய்ரோவில் வருகிற ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பத்து புலம்பெயர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குகொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளது UNHCR என்ற ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவனம்.

சிரியா நாட்டின் இரு நீச்சல் வீரர்கள், காங்கோ சனநாயகக் குடியரசின் இரு ஜூடோ வீரர்கள், எத்தியோப்பியா மற்றும் தென் சூடான் நாடுகளின் ஆறு ஓட்டப்பந்தய வீரர்களை, அனைத்துலக ஒலிம்பிக் குழு(IOC) தேர்ந்தெடுத்துள்ளது என்று அறிவித்தது UNHCR அலுவலகம்.

இந்த விளையாட்டு வீரர்கள், தங்கள் நாடுகளிலிருந்து வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சி, பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க், கென்யா மற்றும் பிரேசிலில் புகலிடம் தேடியிருப்பவர்கள் என்றும் UNHCR அலுவலகம் கூறியது.

புலம்பெயர்ந்த விளையாட்டு வீரர்களின் திறமைகள் பாதிக்கப்பட்டுள்ளதே என்று கவலையடைந்தபோது, இவர்கள் மீண்டும் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது மகிழ்வைத் தருகின்றது என்று, UNHCR நிறுவனத்தின் புலம்பெயர்ந்தவர்க்குப் பொறுப்பான பிலிப்போ கிராந்தி (Filippo Grandi) அவர்கள் கூறினார்.

ஒலிம்பிக்கில், இந்த வீரர்களின் பங்கேற்பு, புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும், தங்களின் துன்பங்களைக் களைந்து, தங்களுக்கும், தங்களின் குடும்பங்களுக்கும் நல்லதோர் எதிர்காலத்தை அமைப்பதற்கு ஊக்கத்தை அளிக்கும் என்றும் கிராந்தி கூறினார்

2014ம் ஆண்டின் கணிப்புப்படி, உலகில் 5 கோடியே 95 இலட்சம் பேர், நாடுகளுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் புகலிடம் தேடுபவர்கள் என்றும், இவ்வெண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கின்றது என்றும் ஐ.நா. கூறியுள்ளது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.