2016-06-07 16:10:00

மியன்மார் அரசு, மதங்கள் மத்தியில் அமைதியை விரும்புகிறது


ஜூன்,07,2016. மியன்மார் தேசிய சனநாயகக் கட்சியின்கீழ் இயங்கும் அந்நாட்டு அரசு, மதங்கள் மத்தியில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்பி, அதற்கு ஆதரவாக சட்ட அமைப்பை உருவாக்கி வருகிறது என்று, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறினார்.

மியன்மார் அரசு, நாட்டில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும், அதேநேரம், நாட்டில் நிலவும் பதட்டநிலைகளைச் சரிசெய்வதற்கு அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது, ஆனால், புதிய அரசின் முயற்சிகளுக்கு, இராணுவமும், ஐக்கிய ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்ற கட்சியும் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்பது சந்தேகமே என்றும் தெரிவித்தார் கர்தினால் போ.

மதங்கள் மத்தியில் நல்லிணக்க வாழ்வை ஊக்குவிப்பது, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பது ஆகிய இரு முக்கிய நடவடிக்கைகள், புதிய அரசுக்குச் சவலாக உள்ளன என்றும் கர்தினால் தெரிவித்தார். 

புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரில், 2012ம் ஆண்டில் தொடங்கிய வகுப்புவாத வன்முறையில், குறைந்தது 300 பேர் இறந்தனர் மற்றும் 1,40,000 பேர் புலம்பெயர்ந்தனர். இவர்களில் அதிகமானோர் ரோஹின்யா முஸ்லிம்கள்.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.