2016-06-07 15:40:00

திருத்தந்தை : பிறரின் வாழ்வில் நற்செய்தியால் சுவையூட்டுங்கள்


ஜூன்,07,2016. ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஒளியாகவும், உப்பாகவும் இருக்க வேண்டும், ஆனால், ஒளியாகவும், உப்பாகவும் தனக்காக அல்ல, பிறருக்காக இருக்க வேண்டும் என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

நீங்கள் உலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறீர்கள் என, இயேசு தம் சீடர்களிடம் கூறிய, இச்செவ்வாய் திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை(மத்.5,13-16) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, எல்லாரும் புரிந்துகொள்ளும் முறையில், எளிய சொற்களால், எளிய ஒப்புவமைகளால் இயேசு எப்போதும் பேசுகிறார் என்று கூறினார்.

கிறிஸ்தவர், ஒளியாகவும், உப்பாகவும் இருக்கவேண்டியதன் அவசியத்தை விளக்கிய திருத்தந்தை, ஒளி, பிறரைச் சுடர்விடச் செய்வதற்கும், உப்பு, பிறருக்கு உவர்ப்பூட்டிக் காப்பதற்கும் உள்ளன என்றும் கூறினார். மேலும், ஒளியும், உப்பும் ஒருபோதும் குறைவுபடாமல் இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பது பற்றியும் அவர் விளக்கினார். 

ஒளியின்றி, செபமின்றி எத்தனையோ செயல்கள் இருளடைந்து விடுகின்றன என்றும், கிறிஸ்தவரின் அனைத்துச் செயல்களையும் சுடர்விடச் செய்வது செபமே என்றும், செபமே ஒளியை உற்பத்தி செய்யும் கிறிஸ்தவரின் பேட்டரி என்றும் கூறிய திருத்தந்தை, ஒளி தானாகச் சுடர்விடாது மற்றும் உப்பு தானாக சுவை தாராது என்றும் உரையாற்றினார்.  

நாம் சளைக்காமல் கொடுத்துக்கொண்டே இருக்கும்போது, உப்பும் ஒளியும் நிலைத்திருக்கும், இறைவாக்கினர் எலியாவை நம்பிய சாரிபாத் கைம்பெண்ணுக்கு நடந்ததும் இதுவே என்றும் கூறினார்  திருத்தந்தை.

கிறிஸ்தவர்கள் தங்களைச் சுடர்விடச் செய்யும் சோதனைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்து, பிறருக்கு ஒளியாக வாழ ஆண்டவர் உதவுவாராக என்றும் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரை ஒளிர்விக்கும் ஒளியாகவும், உவர்ப்பூட்டி பாதுகாக்கும் உப்பாகவும் இருங்கள் என்று திருப்பலியில் கலந்துகொண்ட விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.