2016-06-07 15:47:00

கிராக்கோவ் உலக இளையோர் தினத்தின் மையம் “இரக்கம்”


ஜூன்,07,2016. “சமூக நட்புறவு குறைவுபடும் இக்காலத்தில், நமது முதல் வேலை, சமூகங்களைக் கட்டியெழுப்புவதாகும்”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியாயின

மேலும், வருகிற ஜூலை 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை போலந்தின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில், இரக்கம் என்பதே மையமாக அமைந்திருக்கும் என்று, அந்நகர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ஜூவிஷ் அவர்கள் கூறினார்.

உலக இளையோர் தினத்தை ஆரம்பித்த புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் தாயகத்தில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வு, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கும் என்றும், இதில் 194 நாடுகளிலிருந்து இளையோர் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார் கர்தினால் ஸ்தனிஸ்லாவ்.

வத்திக்கான் வானொலியில், கிராக்கோவ் உலக இளையோர் தின நிகழ்வுகள் பற்றி, இச்செவ்வாயன்று பேசிய கர்தினால் ஸ்தனிஸ்லாவ் அவர்கள், கிராக்கோவ் நகர் இறைஇரக்கத்தின் தலைநகராக இருப்பதால், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இந்த உலக தினம் இந்நகரில் இடம்பெறுவது, பொருத்தமாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.