2016-06-06 15:59:00

வாரம் ஓர் அலசல் – பிறப்பு ஒரு நிகழ்வே, வாழ்வு வரலாறாகட்டும்


ஜூன்,06,2016. “தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதருக்கு வந்துவிட்டால் தொட்டதெல்லாம் துலங்கும்” என்றார் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியார். “முடியாது என்பது ஒரு நோய். முடியும் என்பதே நம் நம்பிக்கை'.  'நம் பிறப்பு ஒரு நிகழ்வே, அதனால் இறப்பு வரலாறாகட்டும்” என்று சொன்னவர் இந்திய ஏவுகணைப் பிதாமகன் நம் ஏ.பி.ஜே அப்துல் கலாம். நம் கலாம் அவர்கள் கூற்றுப்படி, பிறப்பு எப்படியிருந்தாலும் இருக்கட்டும், இறப்பு வரலாறாகட்டும் என்றபடி வாழ்ந்து இறுதி மூச்சை விட்டுள்ளார் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி. இஞ்ஞாயிறன்று ஊடகங்கள் முகமது அலி அவர்கள் பற்றிப் பேசியிருந்தது. உண்மைக்காகப் போராடியவர் என்று முகமது அலியை அழைத்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கடினமான நேரத்தில் உறுதியாக நின்றவர். அவருடைய வெற்றி இன்றைய அமெரிக்க மக்களுக்கு உதவியுள்ளது என்று புகழ்ந்துள்ளார். குத்துச்சண்டையில் உலகச் சாம்பியனாக வருவேன். அம்மாவுக்கு புதிய வீடு வாங்கி கொடுப்பேன் என்று சிறுவனாக இருந்தபோதே தன்னிடம் கூறிய அனைத்தையும், தனது தம்பி நிறைவேற்றியுள்ளதாக, சகோதரர் ரஹ்மான் அலி நினைவுகூர்ந்துள்ளார்.

1967-ம் ஆண்டு வியட்நாமுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரின்போது இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற முகமது அலிக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், முகமது அலி, தனது மத நம்பிக்கை காரணமாக, இதை ஏற்க மறுத்தார். இதனால் 1964-ல் இவர் பெற்ற ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 1970-ம் ஆண்டுவரை குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்ள அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் கலங்காத முகமது அலி, இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஆர்வம் காட்டினார். 1971-ம் ஆண்டு முகமது அலி மீண்டும் குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து மீண்டும் அவர் குத்துச்சண்டை களத்தில் குதித்தார். இவர், ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக உருவெடுப்பதற்கு உந்துசக்தியாக இருந்ததே அவர் ஆசையாக வைத்திருந்த சைக்கிள்தான். 12வது வயதில் அந்த சைக்கிள் திருடு போனது. இதனால் கோபமடைந்த முகமது அலி, அந்த சைக்கிள் திருடன் தன் கையில் கிடைத்தால் அவன் முகத்தில் ஓங்கிக் குத்துவேன் என்று காவல்துறையினரிடம் கூறினார். அந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி ஜோ மார்ட்டின், முகமது அலிக்கு பயிற்சி கொடுத்தார். இப்படியே குத்துச்சண்டை களத்தில் வளர்ந்தார் முகமது அலி. இவர் புகழ்பெறுவதற்கு முன்பு, கருப்பர் என்பதால் சில உணவகங்கள் அவரை அனுமதிக்கவில்லை.

அன்பு இதயங்களே, பிறப்பு ஒரு நிகழ்வாக இருந்தாலும், பலர் தங்களின் வாழ்வால், இறப்பை வரலாறாக்குகின்றனர். இவர்கள், கற்களைப் படிக்கற்களாக்கி முயன்று உச்சத்தைத் தொடுகிறார்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகில், எந்தத் துறையானாலும், புதிய முயற்சிகள், புதிய வடிவமைப்புகள் என்று நாம் கற்றுக்கொண்டே இருந்தால்தான் கற்கள் படிக்கற்களாகும், இறப்பு, வரலாறாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டு வெர்ஜீனியாவைச் சேர்ந்த அனையா எல்லிக் (Anaya Ellick) மணிக்கட்டுக்குக் கீழே கைகள் இல்லாமல் பிறந்தவர். பிறரை எதிர்பார்க்காமல் தானாகவே தன் வேலைகளைச் செய்துகொள்ளப் பழகிக்கொண்ட இவர், இரண்டு கைகளுக்கு நடுவே பேனாவை வைத்துக்கொண்டு எழுதப் பழகினார். முதல் கிரேடு படித்துவரும் அனையா எல்லிக் அவர்களுக்கு, அழகான கையெழுத்திற்காக, 2016-ம் ஆண்டுக்கான நிக்கோலஸ் மாக்ஸிம் சிறப்பு விருது (Nicholas Maxim Special Award) கிடைத்துள்ளது. இவர் பியானோ நன்றாக வாசிக்கிறார்.

அன்பர்களே, ஒவ்வோர் ஆண்டும், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளிவரும்போது, கால்களால் தேர்வு எழுதும், கைகள் இல்லாத மாணவர்களின் மதிப்பெண்கள் நம்மை வியக்க வைக்கின்றன. கும்பகோணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாள்விகா, தனது தந்தையின் பணி காரணமாக இராஜஸ்தானின் பிக்கானிரில் வாழ்ந்து வந்தபோது அந்தக் கொடூரம் நடந்துள்ளது. மாள்விகாவின் குழந்தைப் பருவம், நீச்சல், ஸ்கேட்டிங், கதகளி நடனம் என மிகவும் மகிழ்வாக நகர்ந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. உயர் சிகிச்சை பெறுவதற்காகவே சென்னை வந்திருக்கிறார் இவர். 2002ம் ஆண்டு மே 26–ம் நாள், என் வாழ்க்கையில் வராமலேயே போயிருக்கலாம் என்று, தனது கடந்த காலம் பற்றி தினத்தந்தி நாளிதழில் இப்படி சொல்லியிருக்கிறார்.

“அப்போது எனக்கு 13 வயது. எனக்கு நடந்த அந்த விபத்துக்கு சில மாதங்கள் முன்பாகத்தான், அருகில் இருந்த அரசாங்க வெடிகுண்டுக் கிடங்கில் பெரிய தீ விபத்து ஏற்பட்டிருந்தது. அங்கிருந்த கை வெடிகுண்டு உட்பட பலவிதமான வெடிப்பொருட்களும் வெடித்து, ஊர் முழுக்கச் சிதறிக் கிடந்தன. அதில் ஒரு துண்டு நாங்கள் தங்கியிருந்த பகுதியில் விழுந்திருக்கிறது. இது தெரியாமல் அதை விளையாட்டுப் பொருளாக நினைத்து எடுத்து விளையாட சில நொடிகளிலேயே அது வெடித்து சிதறியது. அவ்வளவுதான்! என்னுடைய இரண்டு கைகளும் சிதறிப் போயின. கால்களும் செயலிழந்து போயின. கால்களில் ‘ஹைப்போ எஸ்தேசியா’என்று சொல்லப்படும் உணர்வுகள் மரத்துப்போன நிலை. கிட்டத்தட்ட 80 விழுக்காடு இரத்தம் போயிருந்தது. இருப்பினும் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன். இடதுகால் மொத்தமும் உணர்வுகளையும், வடிவத்தையும் இழந்திருந்தது. விபத்தில் ஏற்பட்ட காயங்களைவிட, பார்க்க வந்தவர்களின் பரிதாபம் என்னை அதிகமாகக் காயப்படுத்தியது. இருந்தாலும் அம்மாவின் நம்பிக்கை என்னை ஒன்றரை ஆண்டுகளில் எழுந்து நடமாட வைத்தது. செயற்கைக் கைகளைப் பொருத்தி கொண்டேன். பேட்டரியில் இயங்கும் செயற்கைக் கைகள், நிஜக் கைகளைப் போல திறந்து மூடக்கூடியவை. அந்தக் கைகளில் பேனாவை வைத்து எழுதிப் பழகினேன். 10ம் வகுப்புத் தேர்வுக்கு மூன்று மாதம் இருந்த நிலையில் படிப்பு, எழுத்துப் பயிற்சி எனக் கடுமையாக உழைத்தேன். எந்நேரமும் படிப்பு, படிப்பு எனக் கவனமாக இருந்ததால் தேர்வில் நல்ல மதிப்பெண்களும் கிடைத்தன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500–க்கு 483 மதிப்பெண்கள் பெற்றேன். கணிதம், அறிவியல் என இரு பாடங்களில் நூறுக்கு நூறு வாங்கினேன். மேலும், இந்தி பாடத்தில் 97 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தேன். ‘‘தேர்வில் கிடைத்த வெற்றி, என்னை மேன்மேலும் சாதிக்கத் தூண்டியது. என்னைப் பாராட்டி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. மேலும் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா, என்னை அழைத்து பாராட்டினார். இத்தகைய பாராட்டுகள் என்னை ஊக்கப்படுத்தின. சமூக சேவையில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம், ஆராய்ச்சி படிப்புகள் என நிறையப் படித்தேன். சமூக சேவை படிப்பின்போது மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுடன் பழக வாய்ப்பு கிடைத்ததால், அவர்களின் நிலையில் இருந்து, அவர்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. உடல் குறைகளை நினைத்து துவண்டு கொண்டிருந்தவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேச ஆரம்பித்தேன். என்னுடைய கதைகளைக் கூறி அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டினேன். அந்த உத்வேகம்தான் என்னை, தன்னம்பிக்கை பேச்சாளராக மாற்றியது. இப்போது ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்’என எனக்கு கிடைத்திருக்கும் அடையாளத்திற்கு அந்தப் பேச்சுதான் அடித்தளம். இன்றைக்கும் நிறைய பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை சொற்பொழிவுகளை நிகழ்த்த அழைக்கிறார்கள்” என்று கூறும் மாள்விகா கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக பெண்கள் மாநாட்டில் ‘உலகளவில் வளர்ந்துவரும் இளம் தலைவர்’என்ற விருதையும் வென்றிருக்கிறார். மேலும், அவுட்ஸ்டாண்டிங் மாடல் ஸ்டூடென்ட் விருது, ரோலிங் கப் விருது, ஆர்.ஈ.எக்ஸ். கர்மவீரா சக்ரா விருது என குவிந்துகிடக்கும் விருதுகள் இவரின் சாதனை முயற்சிகளை தெளிவுப்படுத்துகின்றன. தன்னம்பிக்கையில் துளிர்த்த வாழ்க்கை’இது.

ஜப்பானின் 96 வயது நிரம்பிய ஷகெமி ஹிராடா அவர்கள், பல்கலைக்கழக பட்டம் பெற்று கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். உலகிலேயே மிக மூத்த பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர், 2ம் உலகப் போரின்போது இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2005ம் ஆண்டில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பீங்கான் மற்றும் மண்பாண்டக் கலை, வடிவமைப்புப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார். தொடர்ந்து, 11 ஆண்டுகள் படித்துவந்த ஹிராடா, அண்மையில் தேர்ச்சி பெற்றார். ஜப்பான் நாட்டில் 100 வயதுக்கும் அதிகமாக வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஜப்பானில், 100 வயதுக்கும் அதிகமான 59,000 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

பிறப்பு ஒரு நிகழ்வே, ஆனால் நம் வாழ்வை வரலாறாக மாற்றிக் காட்டுவோம். அன்பு நெஞ்சங்களே, எந்த விடயத்தில் திறமை உள்ளதோ, அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். அடிக்கடி கவலைப்படாதீர்கள். அதிகாலையில் எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே. தினமும் நிறைய சிரிக்கப் பழகுங்கள். அது நல்ல உடல்நலனையும் நண்பர்களையும் பெற்றுத் தரும். எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, சிறப்பாகச் செய்யுங்கள். நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்குச் சென்றாலும், பயணத்தின்போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள். எதிலும் தனித்துவமாக இருங்கள். நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே! இப்படி வாழுங்கள். உங்கள் வாழ்வால் இறப்பு வரலாறாகும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.