2016-06-04 16:38:00

மனிதவர்த்தகம்,திட்டமிட்ட குற்றம் குறித்த நீதிபதிகளின் மாநாடு


ஜூன்,04,2016. நீதியை ஏற்படுத்தாமல், சமூகத்தில் ஒழுங்கு விதிமுறையோ, உறுதியான வளர்ச்சியோ, சமூக அமைதியோ இடம்பெறாது என்பதால், நீதிபதிகள் தங்களின் அழைப்பையும், தங்களின் முக்கியமான பணியையும் முழுமையாய் ஆற்றுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில், இவ்வெள்ளியன்று தொடங்கிய, மனித வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றம் குறித்த நீதிபதிகளின் மாநாட்டில், அன்று மாலை கலந்துகொண்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

நீதிபதிகள், மனித சமுதாயத்திற்கு அளிக்கும் தனித்துவமிக்கப் பங்கு, தாராளமயமாக்கப்பட்ட ஓர் உலகில், உலகளாவியப் புறக்கணிப்பையும், அதன் பல்வேறு வடிவங்களையும் புரிந்துகொள்வதிலிருந்து வருவதாகும் என்று கூறினார் திருத்தந்தை.

உலகளாவியப் புறக்கணிப்புச் சூழல், பாவ அமைப்புமுறை உருவாக்கப்படக் காரணமாகின்றது, நீதிபதிகள் தங்கள் தொழிலால் இந்த அமைப்புமுறையிலிருந்து சுதந்திரமாக இருக்கின்றனர் என்றும், இந்தச் சுதந்திரமின்றி, ஒரு நாட்டின் நீதித்துறை கறைபடிந்திருக்கும் மற்றும் ஊழலில் இருந்துகொண்டிருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஒருவர் தனது சொந்த அழைப்பை ஏற்பது என்பது, அரசுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பாவத்தின் அமைப்புமுறைகளின் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, தன்னைச் சுதந்திர மனிதராக உணர்வதாகும் மற்றும் அவ்வாறு தன்னை அறிவிப்பதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கட்டாயத் தொழில், நவீன அடிமைமுறை, மனித வர்த்தகம் ஆகியவற்றை ஒழிப்பது குறித்த ஐ.நா.வின் புதிய 8 வளர்ச்சித்திட்ட இலக்குகளில் 7வது இலக்கு நிறைவேறுவதற்கு உதவுவதற்காக, இந்த நீதிபதிகளின் மாநாடு நடைபெறுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த மாநாடு இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.