2016-06-04 16:11:00

பொதுக்காலம் - 10ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


சென்ற ஆண்டு டிசம்பர், 8ம் தேதி, அமல அன்னை திருநாளன்று நாம் துவங்கிய இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், பாதி தூரம் பயணம் செய்துள்ளோம். இது இரக்கத்தின் காலம் என்பதை உணர்த்தும் பல நிகழ்வுகள், திருஅவையிலும், நம் தனிப்பட்ட வாழ்விலும் நிகழ்ந்துள்ளன. இவற்றிற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இவ்வாண்டு நவம்பர் 20ம் தேதி, கிறிஸ்து அரசர் பெருவிழாவுடன் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நிறைவு பெறும். ஜூன் 5, இந்த ஞாயிறு முதல், யூபிலி ஆண்டின் இறுதி ஞாயிறு முடிய, அடுத்த 25 ஞாயிறு வழிபாடுகளில் நாம் சிந்திக்கவிருக்கும் நற்செய்தி பகுதிகள் லூக்கா நற்செய்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன.

லூக்கா நற்செய்தி, 'கருணையின் நற்செய்தி' என்று அழைக்கப்படுகிறது. மற்ற மூன்று நற்செய்திகளை விட, இந்த நற்செய்தியில் இயேசுவின் மனிதத்தன்மை அழகாக சித்திரிக்கப்பட்டுள்ளது. நற்செய்தியாளர் லூக்கா ஓர் ஓவியர் என்பது மரபு. ஓவியருக்கே உரிய மென்மையான மனம் கொண்டு அவர் இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட மென்மையான நேரங்களை அழகுறத் தீட்டியுள்ளார்.

இயேசுவை மட்டுமல்ல, இன்னும் பலரை அவர் மிக அழகாக வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார். யூத சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஆயக்காரர்கள், பாவிகள், நோயுற்றோர், பெண்கள், சிறப்பாக, கைம்பெண்கள் ஆகியோருக்கு லூக்கா தகுந்த மதிப்பளித்துள்ளார். இயேசு ஆற்றிய புதுமைகளிலும், கூறிய உவமைகளிலும் இவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

இந்த ஞாயிறு வழிபாட்டிற்கென நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் கைம்பெண்களை மையப்படுத்திய இரு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. இவ்விரு கைம்பெண்களும் தங்கள் வாழ்வின் ஒரே நம்பிக்கையாய் இருந்த தங்கள் மகன்களை பறிகொடுத்தபின், மீண்டும் உயிரோடு பெறுகின்றனர்.

அரசர்கள் முதல் நூல் 17ம் பிரிவில் நாம் சந்திக்கும் சாரிபாத்து ஊரைச் சேர்ந்த கைம்பெண், இறைவாக்கினர் எலியாவுடன் போராடி, தன் மகனை மீண்டும் பெறுகிறார். லூக்கா நற்செய்தி 7ம் பிரிவில் நாம் சந்திக்கும் நயீன் ஊரைச் சேர்ந்த கைம்பெண்ணுக்கோ, இறைமகன் இயேசு தானாகவே முன்வந்து இந்தப் புதுமையை ஆற்றி, அவருக்கு ஆனந்த அதிர்ச்சியைத் தருகிறார்.

இந்தப் புதுமையில் முதலில் மனதில் படும் ஒரு சிறப்பு அம்சம் - இயேசு தானாக முன்வந்து இந்தப் புதுமையை ஆற்றுகிறார். லூக்கா நற்செய்தியில், இயேசு நலம் நல்கும் புதுமைகள் 17 காணக் கிடக்கின்றன. அவற்றில் 11 புதுமைகளில் நோயுற்றோர் அல்லது அவர் சார்பாக வேறொருவர் விண்ணப்பிக்கும்போது இயேசு குணமளிக்கிறார். மீதம் ஆறு புதுமைகள் விண்ணப்பங்கள் ஏதும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட புதுமைகள். நயீன் கைம்பெண்ணுக்கு இயேசு ஆற்றிய புதுமை இவற்றில் ஒன்று. ஒரு விதவைத் தாயின் நிலை என்ன என்பதை அன்னை மரியாவின் வழியாக நேரடியாக நன்கு உணர்ந்த இயேசு, இப்புதுமையை எவ்வித அழைப்போ, விண்ணப்பமோ இன்றி ஆற்றுகிறார்.

இயேசுவின் இந்தப் புதுமை, முன்னறிவிப்பு ஏதும் இன்றி நாம் வாழ்வில் பெற்றுள்ள அல்லது செய்துள்ள நல்ல செயல்களைப்பற்றி சிந்திக்க நம்மை அழைக்கிறது. உதவிகள் தருவதிலும், பெறுவதிலும் பல வகைகள். உதவி தேவை என்று ஒருவரிடம் கூறும்போது, அல்லது விண்ணப்பிக்கும்போது அந்த உதவியைத் தருவதிலும், பெறுவதிலும் ஒரு தனி நிறைவு கிடைக்கும். ஆனால் அதைவிட மேலான ஒரு நிலையும் நம் வாழ்வில் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

நமது தேவைகளை யாரிடம் சொல்வது, சொன்னாலும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று கவலையிலும், விரக்தியிலும் நாம் இருந்தபோது, நம் நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ நம் மனதை அறிந்தவர்கள் போல், அவர்களாகவே முன்வந்து நம் தேவைகளைத் தீர்த்து வைக்கும்போது, நாம் ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறோம், இல்லையா?

செய்கின்ற உதவிகளைப் படம் பிடித்து, ‘போஸ்டர்’ ஒட்டி, ‘கட்அவுட்’ வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதைப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, இப்படி நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ உதவிகள் செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்போது, ஏதோ அந்த இறைவனே இவர்கள் வடிவில் வந்து போனது போல் நாம் உணர்ந்ததில்லையா? அந்த நிலைதான் இந்தப் புதுமையிலும். “கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்” என்று நாம் சொல்லும் பழமொழிக்கு உயிரூட்டம் தருகிறது இந்தப் புதுமை.

தருவதையும், பெறுவதையும் பற்றி பேசும்போது ஒரு நெருடலான எண்ணமும் மனதில் தோன்றுகிறது. அரசிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க நாள் முழுவதும் வெயிலில் நின்று விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துவிட்டு வந்து, மாதங்கள் பலவாக, சில சமயங்களில் ஆண்டுகள் பலவாகக் காத்திருந்தும் ஒரு பயனும் இல்லாமல், தினம் தினம் அரசின் கதவுகளைத் தட்டி, தட்டி கையும், மனமும் ஓய்ந்துபோகும் ஏழைகளை நினைத்துப் பார்க்கிறேன். இவர்களில் பலருக்கு அவர்கள் இறந்தபின் உதவிகள் வந்துசேர்ந்த செய்திகளைக் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஏழைகளில் ஒருவர் இந்த நயீன் கைம்பெண்.

யூதர் குலத்தில் பொதுவாகவே பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்கள். அதிலும் கைம்பெண்களின் நிலை இன்னும் பரிதாபமானது. இன்றும் நம் நாட்டில் இந்த நிலைதானே. நல்ல காரியம் நடக்கும் வேளையில், அங்கு கைம்பெண்களுக்கு இடமில்லை, அப்படியே அவர்கள் அங்கு வந்தாலும், ஒதுங்கி நிற்கவேண்டும்... போன்ற நியதிகள் இன்னும் நம் பழக்கத்தில் இல்லையா?

இப்படி, யூத சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த நயீன் கைம்பெண்ணுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவரது மகன் மட்டுமே. அவரை, அந்தத் தாய் எவ்வளவு அன்போடு, நம்பிக்கையோடு வளர்த்திருக்க வேண்டும்? தனி ஒரு பெண்ணாய் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது நாம் வாழும் இக்காலத்தில் கண்ணால் காணும் ஓர் எதார்த்தம். இத்தனைச் சவால்களையும், பயங்கரமான சூழல்களையும் சமாளித்து, அந்தக் கைம்பெண் வளர்த்த அந்த நம்பிக்கைக்குரியவர்... இதோ, பிணமாக எடுத்துச் செல்லப்படுகிறார்.

தான் பெற்ற பிள்ளையைப் புதைப்பதுதான் பெற்றோருக்குப் பெரும் வேதனை, பெரும் தண்டனை. தான் பெற்ற பிள்ளைச் சாகும் நிலையில் இருக்கும்போது, எத்தனை பெற்றோர் அந்த பிள்ளைக்குப் பதிலாகத் தங்கள் உயிரை எடுத்துகொள்ளுமாறு இறைவனிடம் வேண்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நயீன் கைம்பெண்ணும் இப்படி வேண்டியிருப்பார். தன் ஒரே மகனைக் காப்பாற்ற சாவோடு போராடியிருப்பார். அவரது வேண்டுதல்கள், போராட்டங்கள் எல்லாம் தோல்வியடைந்து, இப்போது அந்தப் பெண் வாழ்வின் விளிம்புக்கு, விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ஒரு வேளை மகனது அடக்கத்தை முடித்துவிட்டு, தன் வாழ்வையும் முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஒரு நடைபிணமாக அந்த சவ ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த அந்தத் தாயின் நிலையை இயேசு நன்கு உணர்ந்தவராய், அவரைக் கேட்காமலேயே, இறந்த மகனை உயிர்ப்பிக்கிறார். மகனை மட்டும் அல்ல, அந்தத் தாய்க்கும் மறு வாழ்வு தருகிறார் இயேசு.

இன்றைய இரு வாசகங்களும் இளையோரின் மரணம்பற்றி குறிப்பிடுகின்றன. பொதுவாகவே, மரணம் ஈடு செய்யமுடியாத ஓர் இழப்பு என்பது நம் அனுபவம். அதிலும் இளவயதில் ஒருவர் இறக்கும்போது, நமது மனம் வேரற்ற மரம்போல் சாய்ந்து விடுகிறது. இந்த வேளைகளில் இறைவனின் அருள் கரம் நம்மைத் தாங்கவேண்டும், மரணத்தையும் தாண்டிய ஒரு நம்பிக்கையை நமக்குத் தரவேண்டும். மரணம் ஒரு முடிவல்ல, இறுதி வெற்றி சாவுக்கு அல்ல என்பதை உணர்த்தும் பல கதைகளைக் கேட்டிருக்கிறோம். மரணம் தன்னை வெற்றி கொள்ளாமல், மரணத்தை ஒருவகையில் வென்ற ஒரு மருத்துவரின் கதை இது...

மருத்துவ மனையொன்றில் இளையவர் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவர் உயிர் பிழைக்க ஒரு முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மிகக் கடினமான அந்த அறுவைச் சிகிச்சையை ஆற்றக்கூடிய ஒரு குறிப்பிட்ட மருத்துவர் அந்நேரத்தில் அங்கு இல்லை. எனவே, அவருக்கு தொலைபேசியில் அழைப்பு அனுப்பப்பட்டது. மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த அந்த இளையவரின் தந்தை Operation Theatre அருகே நிலைகொள்ளாமல் தவித்தார். அறுவைச் சிகிச்சை ஆற்றக்கூடிய Doctor வரத் தாமதமாகியதைக் கண்டு தந்தைக்குக் கடும் கோபம். அவ்வேளையில், குறிப்பிட்ட அந்த Doctor வந்து சேர்ந்தார். அவரிடம் தந்தை, "டாக்டர், ஏன் இவ்வளவு தாமதம்? உங்களுக்குப் பொறுப்பே இல்லையா?" என்று கத்தினார்.

டாக்டர் மிக அமைதியாக, "நான் வெளியில் இருந்தேன். எனக்கு செய்தி வந்ததும், எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வந்தேன். தயவுசெய்து நீங்கள் அமைதியாக இருந்தால், நான் உடனே என் பணியை ஆரம்பிக்க முடியும்." என்று சொன்னார்.

இதைக் கேட்ட தந்தைக்கு கோபம் கூடியது. “அமைதியாக இருப்பதா? உள்ளே இருப்பது என் மகன். அது உங்கள் மகன் என்றால் இப்படி பேசுவீர்களா?” என்று மீண்டும் கத்தினார். "அது என் மகனாக இருந்தால், 'இறைவன் தந்தார், இறைவன் எடுத்துக்கொண்டார்... இறைவனுக்குப் புகழ்' என்று யோபுவைப் போல வேண்டிக் கொள்வேன். டாக்டர்கள் கடவுள் அல்ல. உயிரை நீடிக்கும் சக்தி கடவுளுக்குத்தான் உண்டு, டாக்டர்களுக்கு அல்ல. எனவே, நான் Operationக்குப் போகிறேன். நீங்கள் ஆண்டவனிடம் போய் வேண்டிக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, Operation Theatreக்குள் சென்றார் டாக்டர். "அடுத்தவருக்கு அறிவுரை கூறுவது எப்போதும் எளிது. தனக்கு வந்தால்தானே தெரியும்" என்று முணுமுணுத்தபடியே தந்தை அகன்றார்.

Operation பல மணி நேரங்கள் நீடித்தது. தந்தைக்கு இருப்பு கொள்ளவில்லை. நம்பிக்கை இழக்கத் துவங்கினார். தாமதமாக வந்த டாக்டர் மீது அவரது கோபம் கூடியது. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், டாக்டர் வெளியே வந்து, "உங்கள் மகன் பிழைத்துக் கொண்டார். உங்களுக்குத் தேவையான மற்ற விவரங்களை நர்ஸ் உங்களுக்குச் சொல்வார்" என்று சொல்லியபடி அவசரமாகக் கிளம்பிச் சென்றார்.

தன் மகனின் உயிரைக் காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி சொல்லவும் தந்தைக்குத் தோன்றவில்லை, மாறாக, தன் மகனின் நிலையைப்பற்றி தெளிவாக விளக்கம் தராமல் டாக்டர் சென்றது, தந்தையின் கோபத்தை இன்னும் கிளறியது.

"என்ன டாக்டர் இவர். மமதை பிடித்தவர். மனிதத் தன்மையே இல்லாதவர். கொஞ்ச நேரம் நின்று என்னிடம் விவரங்களைக் கூறினால் அவர் என்ன குறைந்தா போய்விடுவார்?" என்று அந்தத் தந்தை வாய்க்கு வந்தபடி டாக்டரை திட்டிக் கொண்டிருந்தார் நர்ஸிடம்.

நர்ஸ் கண்களில் கண்ணீர் வடிய பேசினார்: "டாக்டரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார். தன் மகனின் அடக்கச் சடங்கில் பங்கேற்றுக் கொண்டிருந்த டாக்டரை நாங்கள் அழைக்க வேண்டியதாயிற்று. அவரும் மறுப்பு சொல்லாமல் வந்து, உங்கள் மகனைக் காப்பாற்றிவிட்டார். இப்போது தன் மகனை அடக்கம் செய்வதற்காகத்தான் அவர் அவசரமாகச் சென்றார்" என்று கண்ணீருடன் கூறி முடித்தார் நர்ஸ்.

தன் சொந்த மகனை இழந்த நிலையிலும், மற்றொரு உயிரைக் காத்த இந்த டாக்டர், நமக்கெல்லாம் ஒரு பேருண்மையை எடுத்துரைக்கிறார். மரணத்திற்கு நிரந்தரமான வெற்றி கிடையாது. நாம் நினைத்தால், மரணத்தை பல வழிகளில் வெல்லமுடியும். மரணத்தையும் தாண்டி, நல்ல மனங்கள் வாழ்கின்றன என்பதுதான் அந்த உன்னதமான பாடம்.

நயீன் கைம்பெண்ணுக்கு மறுவாழ்வு தந்த இயேசு, நாம் வாழும் சமுதாயத்திலும் கைம்பெண்களைப் பேணிக்காக்கும், மதித்து வாழும் மனதை நமக்குத் தர வேண்டுவோம்.

தான் வாழ்ந்த காலத்திலும், தன் மரணத்தின் வழியாகவும் சாவுக்கு இறுதி வெற்றியைத் தராத இறைமகன் இயேசு, மரணத்தைத் தாண்டிய உண்மைகள் பல உள்ளன என்ற தெளிவை நம் அனைவருக்கும் கற்றுத்தருமாறு மன்றாடுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.