2016-06-04 11:57:00

இது இரக்கத்தின் காலம் : மரணத்தை வென்ற மருத்துவர்


மரணம் தன்னை வெற்றி கொள்ளாமல், மரணத்தை ஒருவகையில் வென்ற ஒரு மருத்துவரின் கதை இது...

மருத்துவ மனையொன்றில் இளையவர் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவர் உயிர் பிழைக்க ஒரு முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மிகக் கடினமான அந்த அறுவைச் சிகிச்சையை ஆற்றக்கூடிய ஒரு குறிப்பிட்ட மருத்துவர் அந்நேரத்தில் அங்கு இல்லை. எனவே, அவருக்கு தொலைபேசியில் அழைப்பு அனுப்பப்பட்டது. மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த அந்த இளையவரின் தந்தை Operation Theatre அருகே நிலைகொள்ளாமல் தவித்தார். அறுவைச் சிகிச்சை ஆற்றக்கூடிய Doctor வரத் தாமதமாகியதைக் கண்டு தந்தைக்குக் கடும் கோபம். அவ்வேளையில், குறிப்பிட்ட அந்த Doctor வந்து சேர்ந்தார். அவரிடம் தந்தை, "டாக்டர், ஏன் இவ்வளவு தாமதம்? உங்களுக்குப் பொறுப்பே இல்லையா?" என்று கத்தினார். டாக்டர் மிக அமைதியாக, "நான் வெளியில் இருந்தேன். எனக்கு செய்தி வந்ததும், எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வந்தேன். தயவுசெய்து நீங்கள் அமைதியாக இருந்தால், நான் உடனே என் பணியை ஆரம்பிக்க முடியும்." என்று சொன்னார்.

இதைக் கேட்ட தந்தைக்கு கோபம் கூடியது. “அமைதியாக இருப்பதா? உள்ளே இருப்பது என் மகன். அது உங்கள் மகன் என்றால் இப்படி பேசுவீர்களா?” என்று மீண்டும் கத்தினார். "அது என் மகனாக இருந்தால், 'இறைவன் தந்தார், இறைவன் எடுத்துக்கொண்டார்... இறைவனுக்குப் புகழ்' என்று யோபுவைப் போல வேண்டிக் கொள்வேன். டாக்டர்கள் கடவுள் அல்ல. உயிரை நீடிக்கும் சக்தி கடவுளுக்குத்தான் உண்டு, டாக்டர்களுக்கு அல்ல. எனவே, நான் Operationக்குப் போகிறேன். நீங்கள் ஆண்டவனிடம் போய் வேண்டிக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, Operation Theatreக்குள் சென்றார் டாக்டர். "அடுத்தவருக்கு அறிவுரை கூறுவது எப்போதும் எளிது. தனக்கு வந்தால்தானே தெரியும்" என்று முணுமுணுத்தபடியே தந்தை அகன்றார்.

Operation பல மணி நேரங்கள் நீடித்தது. தந்தைக்கு இருப்பு கொள்ளவில்லை. நம்பிக்கை இழக்கத் துவங்கினார். தாமதமாக வந்த டாக்டர் மீது அவரது கோபம் கூடியது. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், டாக்டர் வெளியே வந்து, "உங்கள் மகன் பிழைத்துக் கொண்டார். உங்களுக்குத் தேவையான மற்ற விவரங்களை நர்ஸ் உங்களுக்குச் சொல்வார்" என்று சொல்லியபடி அவசரமாகக் கிளம்பிச் சென்றார். தன் மகனின் உயிரைக் காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி சொல்லவும் தந்தைக்குத் தோன்றவில்லை, மாறாக, தன் மகனின் நிலையைப்பற்றி தெளிவாக விளக்கம் தராமல் டாக்டர் சென்றது, தந்தையின் கோபத்தை இன்னும் கிளறியது.

"என்ன டாக்டர் இவர். மமதை பிடித்தவர். மனிதத் தன்மையே இல்லாதவர். கொஞ்ச நேரம் நின்று என்னிடம் விவரங்களைக் கூறினால் அவர் என்ன குறைந்தா போய்விடுவார்?" என்று அந்தத் தந்தை வாய்க்கு வந்தபடி டாக்டரை திட்டிக் கொண்டிருந்தார் நர்ஸிடம். நர்ஸ் கண்களில் கண்ணீர் வடிய பேசினார்: "டாக்டரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார். தன் மகனின் அடக்கச் சடங்கில் பங்கேற்றுக் கொண்டிருந்த டாக்டரை நாங்கள் அழைக்க வேண்டியதாயிற்று. அவரும் மறுப்பு சொல்லாமல் வந்து, உங்கள் மகனைக் காப்பாற்றிவிட்டார். இப்போது தன் மகனை அடக்கம் செய்வதற்காகத்தான் அவர் அவசரமாகச் சென்றார்" என்று கண்ணீருடன் கூறி முடித்தார் நர்ஸ்.

தன் சொந்த மகனை இழந்த நிலையிலும், மற்றொரு உயிரைக் காத்த இந்த டாக்டர், நமக்கெல்லாம் ஒரு பேருண்மையை எடுத்துரைக்கிறார். மரணத்திற்கு நிரந்தரமான வெற்றி கிடையாது. நாம் நினைத்தால், மரணத்தை பல வழிகளில் வெல்லமுடியும். மரணத்தையும் தாண்டி, நல்ல மனங்கள் வாழ்கின்றன என்பதுதான் அந்த உன்னதமான பாடம். இரக்கத்தின் காலத்தில், இத்தகையப் பாடங்களைப் பயில முயல்வோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.