2016-06-03 15:49:00

முதல் முறையாக திருநங்கைக்கு கவுரவ முனைவர் பட்டம்


ஜூன்,03,2016. இந்தியாவில், முதல் முறையாக பெங்களூருவைச் சேர்ந்த திருநங்கை அக்கை பத்மஷாலி(Akkai Padmashali) அவர்கள் கவுரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த திருநங்கை அக்கை பத்மஷாலி, நடுத்தரக் குடும்பத்தில் ஆணாக‌ப் பிறந்தவர். 10-ம் வகுப்பு படிக்கும்போது உடலில் ஏற்பட்ட சுரப்பி மாற்றங்களால் திருநங்கையாக மாறினார். குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டதால், நிராதராவாக தெருவில் விடப்பட்டார். பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் பாலியல் தொழிலாளியாக ஆக்கப்பட்டார்.

பாலியல் தொழிலாளர்களுக்காகப் போராடிவரும் ''சங்கமா'' தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் அக்கை பத்ம‌ஷாலியை மீட்டனர். அங்கு விழிப்புணர்வு பெற்ற அக்கை பத்மஷாலி சில ஆண்டுகள் சங்கமாவுடன் இணைந்து பாலியல் தொழிலாளர் நலனுக்காவும், பாலியல் சிறுபான்மையின‌ர் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

பின்னர் திருநங்கையர் நலனுக்கு தனியாக ''ஒந்ததே'' என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன்மூலம் நாடு தழுவிய அளவில் திருநங்கைகள் உரிமைக்காகவும், நலனுக்காவும் போராட்டங்களை நடத்தி வருகிறார். குழந்தைகள் நலன், பெண்ணுரிமை உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளுக்காகவும் போராடி வருகிறார்.

இந்நிலையில் அமைதி மற்றும் கல்விக்கான இந்திய மெய்நிகர் பல்கலைக்கழகம்(Indian Virtual University for Peace and Education) கடந்த மே 31ம் தேதி திருநங்கை அக்கை பத்மஷாலிக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது. திருநங்கைகள் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து போராடி வருவதால் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டிலேயே முதன் முதலாக கவுரவ முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார் அக்கை பத்மஷாலி.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.