2016-06-02 16:40:00

நைஜீரியாவை விட்டு வெளியேறும் நிலையில் கிறிஸ்தவர்கள்


ஜூன்,02,2016. நைஜீரியாவில் இடம்பெற்றுவரும் இஸ்லாமிய வன்முறைகளால் பெருமெண்ணிக்கையில் அந்நாட்டு கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 13 இலட்சம் கிறிஸ்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, சொந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறும் செய்தி நிறுவனங்கள், 13000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ கோவில்கள் சேதமாக்கப்பட்டுள்ளன, அல்லது, கைவிடப்பட்டுள்ளன எனவும், 11 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில், இஸ்லாமியர்கள் வடபகுதியிலும், கிறிஸ்தவர்கள் மத்திய பகுதியிலும் பெருமளவாக வாழ்ந்து வந்துள்ள நிலையில், 2006ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய குழுக்கள், கிறிஸ்தவர்களின் இடத்தை கைப்பற்றி, அவர்களை விரட்டியடிப்பது துவங்கியுள்ளது. தங்கள் இடத்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் கிறிஸ்தவர்கள் கொலைச் செய்யப்படுவதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

நைஜீரிய கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் இத்தகைய துன்பநிலைகள் குறித்து, அந்நாட்டின் Kafachan ஆயர் ஜோசப் பகொபிரி அவர்கள், ஐ.நா. நிறுவனத்திடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதுடன், அனைத்துலக சமுதாயத்திடம் பாதுகாப்பு உறுதிக்கும் விண்ணப்பித்துள்ளார். 

ஆதாரம் : Catholic org./வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.