2016-06-01 16:18:00

புதன் மறைக்கல்வி : எளிய மனம் இறைஇரக்கத்தைப் பெற்றுத் தரும்


ஜூன்,01,2016. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், மேற்கு ஐரோப்பாவிற்கு கோடைக்காலம், அதிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும்போது, இத்தாலியில் வெப்பம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஏனெனில்,  இத்தாலி நாடு, ஐரோப்பாவின் தென் பகுதியில், ஆப்ரிக்காவிற்கு அருகில் உள்ள நாடு. வெப்பம் இங்கு தற்போது உணரப்படுகின்றபோதிலும், காலையும் மாலையும் இதமான குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய ஒரு காலநிலையில், இம்மாதத்தின் முதல் தேதி புதனன்று புனித பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்விப் போதனைக்குச் செவிமடுக்க பெருமெண்ணிக்கையில் மக்கள் கூடியிருக்க, 'எளிமையான உள்ளத்துடன் எழுப்பப்படும் செபம், இறைஇரக்கத்தைப் பெற்றுத் தரும்' என்ற தலைப்பில் மறைக்கல்வி உரை இடம்பெற்றது.

அன்புச் சகோதர சகோதரிகளே, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிற்கான நம் மறைக்கல்விப் போதனைகளின் தொடர்ச்சியாக, இன்று நாம் இயேசுவின், 'பரிசேயரும் வரிதண்டுபவரும்'(லூக். 18:9-14) என்ற உவமை குறித்து நோக்குவோம். பரிசேயரின் செபத்தில் காணப்படும் அகந்தையையும், தற்புகழ்ச்சியையும் நமக்குக் காட்டும் இயேசு, வரிதண்டுபவரின் 'தன் பாவத்தை ஏற்கும் எளிய மனநிலையையும் இறைஇரக்கத்தின் தேவை உணர்வையும்' சுட்டிக்காட்டி, இருவரையும் நம் முன்வைக்கிறார். தன் பாவங்களுக்காக வருந்தும் அதேவேளை, இறைவனையும், அடுத்திருப்பவரையும் அன்புகூரும் உன்னதக் கட்டளையை நிறைவேற்ற இறையருளை வேண்டும் இதயத்திலிருந்து உண்மையான செபம் என்பது பிறக்கிறது. தன் அருகே நின்று செபிக்கும் பாவியாகிய வரிதண்டுபவரைக் குறித்த பரிசேயரின் ஏளனப் புறக்கணிப்பு, கடவுளின் பார்வையில் அந்தப் பரிசேயர் ஏற்புடையவராக இருப்பதிலிருந்து தடுக்கிறது. ஆகவே, நன்முறையில் செபிக்கவேண்டுமெனில், முதலில் நாம், நம் இதயங்களை ஆழமாக உற்றுநோக்க வேண்டும். அங்கு, தாழ்ச்சியுடன் கூடிய அமைதியில், இறைவன் நம்முடன் உரையாட அனுமதிப்போம். இறைவன் நம்மிடம் கேட்கும் நேர்மை மற்றும் தாழ்ச்சி எனும் பண்புகள், அவரின் இரக்கத்தைப் பெறுவதற்கான நிபந்தனைகளாகும். அன்னை மரியாவே இத்தகைய செப வேண்டுதலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு. அன்னை மரியாவின் புகழுரைப் பாடலில், இறைவன் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கி, அடிமையின் குரலுக்குச் செவிசாய்ப்பதாக, அன்னை மரியாவே கூறுவதைக் காண்கிறோம். நம் அன்னையாகிய மரியா, நாம் எவ்விதம் செபிக்க வேண்டும் என்பதற்கு உதவுவாராக. 

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குக் குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.