2016-06-01 17:39:00

சுவிட்சர்லாந்தில் உலகின் மிக நீளமான சுரங்க இரயில் பாதை


ஜூன்,01,2016. சுவிட்சர்லாந்தில், ஏறத்தாழ இருபது ஆண்டுகாலக் கட்டுமானப் பணி நிறைவடைந்து, உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான சுரங்க இரயில் பாதை இப்புதனன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்படுகிறது.

சுவிஸ் சாலைகளில் ஏற்படும் வாகனப்போக்குவரத்தைக் குறைப்பதற்காக, அந்நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியின்கீழ், 2.3 கிலோ மீட்டர் ஆழத்தில், வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்கு இடையே 57 கி.மீ. நீளமுள்ள, கோத்தார்ட்(Gotthard) சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

இந்தச் சுரங்கப்பாதையை பொறியியல் அற்புதம் என்றும் சுவிஸ்சின் துல்லியத்தன்மையோடு குறித்த நேரத்தில் மற்றும் 12 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் வர்ணிக்கப்படுகிறது.

லாட்டரி குலுக்கல் முறையில் இந்த சுரங்கப்பாதையில் முதலில் பயணம் செய்யவிருக்கும் 500 பேர் தேர்வு செய்யப்படுவர்.

வரும் டிசம்பர் மாதம் முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது, 250க்கும் மேற்பட்ட சரக்கு இரயில்களும், 65 பயணிகள் இரயில்களும் இந்தச் சுரங்கப்பாதையை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இயில் சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்ட நிலையில், உலகின் மிக நீண்ட சுரங்க இரயில் பாதையாகத் தற்போது இருக்கும், ஜப்பானின் 53.9 கி.மீ. நீளமுடைய Seikan இரயில் சுரங்கப்பாதையை இரண்டாம் இடத்துக்கும், பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள 50.5 கிமீ நீளமான, ஆங்கிலக் கால்வாய்க்கு அடியில் செல்லும் Channel சுரங்க இரயில் பாதையை மூன்றாம் இடத்துக்கும் இது தள்ளிவிட்டது.

ஜெர்மன் சான்சலர் Angela Merkel, பிரெஞ்ச் அரசுத்தலைவர் Francois Hollande மற்றும் இத்தாலியப் பிரதமர் மத்தேயோ ரென்சி ஆகியோர் இந்த இரயில் சுரங்கப் பாதை திறக்கப்படும் நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.