2016-06-01 16:51:00

சகோதரிப் பூமியைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை


ஜூன்,01,2016. ஒரு தாய் அல்லது ஒரு சகோதரி தங்களைச் சார்ந்தவர்களைப் பேணிப் பாதுகாப்பது போன்று, நாம் அனைவரும், கனிவோடும், அமைதியோடும் நம் சகோதரிப் பூமியைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று இப்புதனன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்கு முன்னர், இலண்டன் ஜைனயியல் நிறுவன உறுப்பினர்களை, வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, இச்சந்திப்பு தனக்கு மகிழ்வைத் தருகின்றது என்றும், படைப்பைப் பாதுகாப்பதற்கு நமக்கிருக்கும் பொறுப்பை இது வளர்க்கின்றது என்றும் கூறினார்.

படைப்பு, நாம் எல்லாரும் பெற்றுள்ள கொடை என்றும், இப்படைப்பு, கடவுளின் படைத்தவரின், இயற்கையின், ஏன் நமது கண்ணாடி என்றும் கூறிய திருத்தந்தை, நாம் எல்லாரும், தாய்ப் பூமியை விரும்புகிறோம், ஏனென்றால், அது நமக்கு வாழ்வளித்து, நம்மைப் பாதுகாக்கின்றது, இதைச் சகோதரிப் பூமி என்று நான் அழைக்கிறேன், நம் வாழ்வு முழுவதும் இது நம்முடன் வருகிறது என்றும் கூறினார்.

பூமியைப் பாதுகாத்துப் பேணுவதற்கு ஜைன மதத்தினர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், பூமியைக் குணப்படுத்தி பாதுகாப்பது, முழு மனித சமுதாயத்தையும் குணப்படுத்தி பாதுகாப்பதாகும் என்ற உணர்வில் நாம் நிலைத்திருப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

1983ம் ஆண்டில் நிறுவப்பட்ட இலண்டன் ஜைனயியல் நிறுவனம், ஓர் அறக்கட்டளையாகும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை மற்றும் வன்முறையின்றி வாழ்தல், ஜைனர்களின் அடிப்படைக் கோட்பாடுகளாகும். கலை, கலாச்சாரம் மற்றும் கல்வி வழியாக, ஜைன மதத்தையும், அதன் மதிப்பீடுகளையும் பரப்புவதே ஜைனயியல் நிறுவனத்தின் பணியாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.