2016-05-31 16:11:00

மனைவியரை அடிப்பதற்கு அனுமதிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு


மே,31,2016. பாகிஸ்தானில் தங்களுக்குப் பணியாத மனைவியரை அடிப்பதற்கு அனுமதிக்கும் மசோதா ஒன்றை, அந்நாட்டு இஸ்லாமிய கருத்தியல் அவை(IIC) பரிந்துரை செய்திருப்பதற்கு எதிராக, அந்நாட்டுக் கிறிஸ்தவப் பெண்கள் உட்பட பல தரப்பினர் தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டதிலிருந்து, பாகிஸ்தான் மனித உரிமைகள் குழு(HRCP), சமூக ஊடகங்கள் உட்பட பலதரப்பிலுமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மனைவிமார் அடிக்கப்படுவதை இஸ்லாம் மதம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை, உடல்முறையான தண்டனையை இஸ்லாம் கண்டனம் செய்கின்றது என்று, பாகிஸ்தான் மனித உரிமைகள் குழுவின் Mehboob Ahmad அவர்கள் தெரிவித்தார்.

ஆண்களும், பெண்களும் சமமான உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர் என்றும், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் Ahmad அவர்கள் எச்சரித்தார்.

பாகிஸ்தானில், பொதுவாக, பெண்கள் விவகாரத்தில் மௌனம் காக்கும் சமூக ஊடகங்கள், இவ்விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டின் அரசமைப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய அவை பரிந்துரைத்துள்ள மசோதா கொடூரமானது என்று சொல்லி, இதனை அரசு இரத்து செய்யுமாறு கிறிஸ்தவப் பெண்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.