2016-05-31 15:31:00

FAO நிறுவனத்தில் கர்தினால் தாக்லே உரை


மே,31,2016. உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுவது, உலகில் அனைவருக்கும் உணவளிக்கும் முயற்சிக்குப் பெரும் தடையாய் இருப்பதோடு, மனித முன்னேற்றத்தையும் பின்னடையச் செய்கின்றது என்று, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் லூயிஸ் தாக்லே அவர்கள் கூறினார்.

FAO எனும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில், இத்திங்கள் மாலையில் உரையாற்றிய, மனிலா கர்தினால் தாக்லே அவர்கள், திருஅவையின் காரித்தாஸ் நிறுவனங்கள், தங்களின் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு,  உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுவது முக்கிய தடங்கலாக உள்ளது என்று கூறினார்.

அறுவடை, சந்தைக்குப் பொருள்களை எடுத்துச் செல்லுதல், சந்தையில் பொருள்கள் விற்பனை, சேமிப்புக் கிடங்குகள் என, வேளாண்மையின் பல நிலைகளில் உணவுப் பொருள்கள் அதிகம் சேதமடைகின்றன என்றும், இவை குறுநில விவசாயிகளின் வாழ்வுக்குக் கடும் அச்சுறுத்தலாக உள்ளன என்றும் கூறினார் கர்தினால் தாக்லே.

ஒவ்வொரு மனிதரும் போதுமான உணவைக் கொண்டிருப்பதற்குரிய அடிப்படை உரிமை, பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சவால் மட்டுமல்ல, இது அறநெறி மற்றும் உடல்கூறு சார்ந்த சவாலுமாகும் என்றும் FAO நிறுவனத்தில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார் கர்தினால் தாக்லே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.