2016-05-28 15:00:00

மாயோ அன்னையர் கழகத் தலைவர் திருத்தந்தையிடம் மன்னிப்பு


மே,28,2016. "ஆண்டவரில் உறுதியான நம்பிக்கை வைத்து, விசுவாசப் பயணத்தில் நிலைத்திருங்கள், இதுவே நம் பயணத்தின் இரகசியம்!" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், அர்ஜென்டீனா நாட்டு மாயோ அன்னையர் கழகத் தலைவரான 87 வயது நிரம்பிய Hebe de Bonafini அவர்கள், இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய Hebe de Bonafini அவர்கள், தானும் திருத்தந்தையும் அன்போடு வாழ்த்துத் தெரிவித்ததாகவும், திருத்தந்தை குறித்த தனது முன்னைய விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அர்ஜென்டீனா நாட்டின் தற்போதைய சூழல், குறிப்பாக, வேலைவாய்ப்பின்மையால் பெருமளவான மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்தும் திருத்தந்தையிடம் கலந்து பேசியதாகத் தெரிவித்தார் Hebe de Bonafini.

அர்ஜென்டீனாவில், 1976ம் ஆண்டு முதல், 1983ம் ஆண்டுவரை நடந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியில், காணாமல்போன பிள்ளைகளின் அன்னையர்களைக் கொண்டு, Asociación Madres de Plaza de Mayo என்ற அன்னையர் கழகத்தைத் தொடங்கி அதன் தலைவராகப் பணியாற்றுபவர் Hebe de Bonafini. அச்சமயத்தில், தனது இரு மகன்களையும், ஒரு மருமகளையும் இழந்தவர் Hebe de Bonafini.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.