2016-05-28 14:44:00

பல்வேறு மதங்கள், கலாச்சாரங்களுக்கிடையே உரையாடல் முக்கியம்


மே,28,2016. தென்கிழக்கு ஆசியாவில் மனித உரிமைகள், நிலையானதன்மை, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதற்கு, பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையே உரையாடல் முக்கியம் என்று, சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் Tony Tan Keng Yam அவர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிங்கப்பூர் அரசுத்தலைவர் Keng Yam அவர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசியபோது, உலகளாவிய மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் கலந்துரையாடினார் திருத்தந்தை. 

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகெர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார் சிங்கப்பூர் அரசுத்தலைவர் Tony Tan Keng Yam.

சிங்கப்பூர் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே, குறிப்பாக, கல்வி மற்றும் சமூகவாழ்வில் தலத்திருஅவைக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள் குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.  

திருத்தந்தையின் நூலகத்தில் மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் இருபது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், தனது மனைவி மற்றும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த 15 பேரையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைத்து பரிசுப் பொருள்களை வழங்கினார் சிங்கப்பூர் அரசுத்தலைவர் Tony Tan Keng Yam.

சிங்கப்பூரின் பெரிய பொதுப் பூங்காவாகிய "வளைகுடா தோட்டத்தின்" நினைவுச்சின்னம், "Domes" என்ற தலைப்பிலுள்ள அங்குள்ள இரு கோபுரங்கள் பற்றிய ஒரு புத்தகம் ஆகியவற்றை, திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினார் அரசுத்தலைவர் Tony Tan Keng Yam.

திருத்தந்தையும், "Laudato si", "Evangelii gaudium", "Amoris laetitia" ஆகியவற்றின் பிரதிகளையும், அமைதியின் பதக்கம் ஒன்றையும் அரசுத்தலைவருக்கு வழங்கியதோடு, உண்மையான அரசுத்தலைவரின் பணி இது என்றும் கூறினார்.

இப்பரிசுகளைப் பெற்றுக்கொண்ட சிங்கப்பூர் அரசுத்தலைவர், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குத் திருத்தந்தை எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டியதோடு, திருத்தந்தையைச் சந்திப்பது எவ்வளவு அழகானது என்றும் தெரிவித்தார்.

மலாய் தீபகற்பத்தின் தென்முனையில் அமைந்துள்ள தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் 33 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் புத்த மதத்தினர். 18 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இன்னும், தாவோயிசம், இந்து, இஸ்லாம் மற்றும் எந்த மதத்தையும் சாராதவரும் வாழ்கின்ற அந்நாட்டில், ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ், ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.