2016-05-28 15:07:00

நிரந்தரத் தியாக்கோன்கள் யூபிலி விழா மே 29 ஞாயிறு


மே,28,2016. நிரந்தரத் தியாக்கோன்கள் யூபிலி விழாவை, மே 29, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிச் சிறப்பிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, இவ்வெள்ளியன்று, ஆயிரக்கணக்கான நிரந்தரத் தியாக்கோன்கள், தங்களின் துணைவியார்களுடன், உரோம் நகரில் மூன்று நாள் யூபிலிக் கொண்டாட்ட நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளனர்.

ஆங்கிலம், ஜெர்மன், போர்த்துக்கீசியம், இத்தாலியம் என, மொழிவாரியாகப் பிரிந்து, தியாக்கோன்கள் என்பதன் அர்த்தம் என்ன? இந்தத் திருப்பணி, அவர்களின் குடும்பங்களுக்கு முன்வைக்கும் சவால்கள் என்ன? தங்களின் இந்த அழைத்தல் குறித்து ஆயர்கள், அருள்பணியாளர் உட்பட பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி? என்பன பற்றி, இந்நிகழ்வுகளில் கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து வருகின்றன.

உலகில், ஏறத்தாழ 45 ஆயிரம் நிரந்தரத் தியாக்கோன்கள், தங்கள் குடும்பங்களை நடத்துவதற்காக மற்ற வேலைகளைச் செய்துகொண்டே, பங்குப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.