2016-05-28 15:20:00

இந்தோனேசியப் புகையிலை பண்ணைகளில் சிறார் தொழிலாளர்


மே,28,2016. இந்தோனேசியாவில் புகையிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் சிறாரை மீட்டெடுப்பது, அந்நாட்டில் இடம்பெற வேண்டிய மிக முக்கிய அவசரகால நடவடிக்கையாகும் என்று, மனித உரிமைகள் வாச் அமைப்பு(HRW) அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

எட்டு வயதுச் சிறார் உட்பட, பல சிறார், சுட்டெரிக்கும் வெப்பத்தில், நிக்கோட்டின், இன்னும் பிற ஆபத்தான நச்சுக்கலந்த வேதியப் பொருள்கள் மத்தியில் வேலை செய்கின்றனர் என்று AP செய்தி நிறுவனம் கூறியது.

உலகில் புகையிலை உற்பத்தியில் ஐந்தாவது இடத்திலுள்ள இந்தோனேசியாவில், ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட புகையிலைத் தோட்டங்கள் உள்ளன. இவைகளில், 10க்கும் 17 வயதுக்கும் உட்பட்ட 15 இலட்சம் சிறார் வேலை செய்கின்றனர் என்று, உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது.

மே 31, உலகப் புகையிலை எதிர்ப்பு நாளாகும். ஒருவர் புகைப்பதை நிறுத்திய 20 நிமிடங்களில் இரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் இயல்பு நிலைக்கு வரும். 8 மணி நேரத்தில் இரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு உடலிலிருந்து வெளியேறும் மற்றும் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்புக்குத் திரும்பும்; அதனால் உடல்சக்தி முன்பைவிட மேம்பட்டிருக்கும். 2 நாட்களில்  நரம்புமுனைகள் திரும்ப வளர ஆரம்பிக்கும். நாக்கின் சுவை மொட்டுகளும் மணங்களை உணரும் தன்மையும் அதிகரிக்கும்; அதனால் உணவின் சுவை முன்பைவிட மேம்பட்டிருக்கும். 2-12 வார இடைவெளியில், உடலில் மேல்தோலும், இரத்தவோட்டமும், சுவாசமும், நுரையீரல் செயல்பாடும் மேம்படும் மற்றும் நடை எளிதாகும். 1-9 மாத இடைவெளியில் இருமல், சைனஸ் இறுக்கம் தளரும். 

ஆதாரம் : AP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.