2016-05-27 16:00:00

பிறரோடு உணவைப் பகிர்வதற்கு திருநற்கருணையில் வலிமை


மே,27,2016. திருநற்கருணை பவனி என்பது, திருநற்கருணையில், கிறிஸ்து தம்மையே கொடையாக அளித்ததைக் கவுரவப்படுத்துவதாகும், அதேநேரம், இந்தப் பவனிகள் இடம்பெறும் மாநகரங்களிலும், நகரங்களிலும் வாழ்கின்ற மக்களோடு, உணவையும், விசுவாசத்தையும் பகிர்வதற்கு உறுதி எடுப்பதாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் இவ்வியாழனன்று இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா சிறப்பிக்கப்பட்டது. இந்நாளன்று, மாலை ஏழு மணிக்கு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் போல, நாமும் பிறருக்காக, நம்மையே நாம் பிட்டுப் பகிர்ந்து வாழ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு திருப்பலியிலும், மக்கள், தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்ட கரங்களில் சாதாரண அப்பத்தையும், இரசத்தையும் வைக்கின்றனர் என்றும், இயேசு, நமக்கு அவரின் உடலையும், குருதியையும் தருகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இத்திருப்பலி முடிந்து, அங்கிருந்து ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள உரோம் மேரி மேஜர் பசிலிக்கா வரை திருநற்கருணை பவனியும் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.