2016-05-27 16:05:00

நாட்டைவிட்டு மக்களை வெளியேற்றுவது, மரண தண்டனைச் சமம்


மே,27,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேற்றதாரர்க்கெதிராக இடம்பெறும் புதிய நடவடிக்கைகள், மரணத்திற்குத் தப்பித்து, மத்திய அமெரிக்காவிலிருந்து வெளியேறும் குடியேற்றதாரரின் துன்பச் சூழலை உணரத் தவறுவதாக உள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

பெண்களையும், சிறாரையும் மத்திய அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்புவது, மக்களின் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த விதத்திலும் உதவாது, ஏனென்றால், இது மனிதாபிமானப் பிரச்சனை என்றும், இம்மக்கள், தங்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்காக, நாடுகளைவிட்டு வெளியேறுகின்றவர்கள் என்றும் அமெரிக்க ஆயர் Eusebio Elizondo அவர்கள் தெரிவித்தார்.

மத்திய அமெரிக்காவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ள நூற்றுக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சிறாரை வெளியேற்றுவதற்கு  அமெரிக்க அரசு திட்டமிட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டதையொட்டி, அரசின் இந்நடவடிக்கையைக் குறை கூறியுள்ளார், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுத் தலைவர் ஆயர் Elizondo.

ஜார்ஜியா, டெக்சஸ், வட கரோலினா ஆகிய மாநிலங்களில் கடந்த சனவரியில் 121 பேரைத் தடுத்து நிறுத்தியுள்ளது அமெரிக்க அரசு. இவர்களில் பெரும்பாலானோர் தாய்மார் மற்றும் சிறார்.

2015ம் ஆண்டு அக்டோபர் முதல், 2016ம் ஆண்டு மார்ச் வரை அமெரிக்க எல்லைக் கட்டுப்பாட்டுக் காவலர்கள், 32 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.