2016-05-27 16:06:00

இந்தோனேசியாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை


மே,27,2016. இந்தோனேசியாவில் பாலியல் குற்றவாளிகளின் இனப்பெருக்க உறுப்பை மருந்துகள் செலுத்தி ஆற்றல் இழக்கச் செய்வதை அனுமதிக்கும் சட்டவிதிமுறையில் அரசுத்தலைவர் ஜோகோ விடோடோ அவர்கள் கையெழுத்திட்டிருப்பது குறித்து, அந்நாட்டுத் திருஅவை அதிகாரிகள் குறை கூறியுள்ளனர்.

மே 25, கடந்த புதனன்று, அரசுத்தலைவர் கையெழுத்திட்டுள்ள சட்டவிதிமுறையில், தற்காலிக விடுதலையின்பேரில் செல்லும் குற்றவாளிகளுக்கு, மின்னணு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படுவதற்கும் வழியமைக்கிறது.

சிறாரைப் பாலியல் வன்செயலிலிருந்து பாதுகாப்பதற்கு, அரசு கொண்டிருக்கும் நோக்கத்தைப் பாராட்டும் அதேவேளை, ஏற்கனவே அந்நாட்டில் எழுதப்பட்டுள்ள சிறார் பாதுகாப்புச் சட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று, இந்தோனேசிய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் குடியேற்றதாரர் பணிக்குழுச் செயலர் அருள்பணி Paulus Christian Siswantoko அவர்கள் கூறினார்.

இந்தோனேசியாவில் அண்மைக் காலமாக பாலியல் வன்செயல் குற்றங்கள் பெருகி வரும்வேளை, கடந்த ஏப்ரல் 2ம் தேதி, 14 வயது சிறுமி ஒருவர், பள்ளிக்குச் சென்றுவரும்போது, 14 ஆண்கள் கொண்ட ஒரு கும்பல் கற்பழித்துவிட்டது. இதற்கு ஒருமாதம் சென்று, மேற்கு ஜாவாவில், 2 வயதுச் சிறுமியை, அடுத்த வீட்டுக்காரரான 26 வயது நிரம்பிய ஆண், பாலியல் வன்கொடுமை புரிந்து கொலை செய்தார். இதனால், அந்நாட்டின் அரசுத்தலைவர் ஜோகோ விடோடோ, புதிய விதிமுறைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் சிறுமிகளைப் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கினால், அதிகபட்சமாக 14 ஆண்டு சிறைத்தண்டனைதான் விதிக்க முடியும் என்று ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2011க்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், சிறார்க்கெதிரான 2,124 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. 

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.