2016-05-27 15:47:00

இது இரக்கத்தின் காலம்...: அன்பில்லாத அறத்தால் எப்பயனுமில்லை!


ஒரு காலத்தில் சதானிகன் என்ற அரசர் ஆண்டு வந்தார். நல்லறம் செய்து சொர்க்கம் செல்ல விரும்பி, பல அறங்களைச் செய்து வந்தார். வேள்விகள் பல செய்ததுடன், கோவில்கள் பலவற்றிற்கு குடமுழுக்கும் ஆற்றினார். ஆனால், குடிமக்களை வரி என்ற பெயரில் கொஞ்சமும் அன்பு இன்றி துன்புறுத்தி வந்தார்.

அரசர் இறந்தார், நரகத்திற்குப் போனார்.

ஒரு சமயம் பார்க்கவ முனிவர் நரகத்தைக் காணச் சென்றார். அங்கே அரசரை, எம தூதர்கள் செக்கிலிட்டு ஆட்டிக்கொண்டு இருந்தார்கள். அதைக் கண்ட முனிவர், அரசரிடம் சென்று, ‘எனக்குத் தெரிந்து எவ்வளவோ அறங்களையும், வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய், அப்படி நீ செய்த பாவம்தான் என்ன? ஏன் நரகத்திற்கு வந்துள்ளாய்…?’ என்று கேட்டார்.

‘தவ முனிவரே! என்னிடம் அற உணர்வு இருந்ததே தவிர, அன்புணர்வு கொஞ்சமும் இல்லை. மக்களுக்கு வரிமேல் வரிபோட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறேன். அதற்குத்தான் இந்தத் தண்டனை’ என்று தன் குற்றத்தை உணர்ந்து திருந்தி பேசினார் மன்னர்.

அன்பில்லாத அறத்தால் எப்பயனுமில்லை! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.