2016-05-26 15:29:00

ஜெர்மனியின் கத்தோலிக்க விழாவுக்கு காணொளிச் செய்தி


மே,26,2016. ஜெர்மனியின் Leipzigல், இப்புதனன்று தொடங்கியுள்ள நூறாவது கத்தோலிக்க நாள் விழாவுக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெர்மனியில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நல்லுறவுகள் நிலவுவது குறித்து தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்த நூறாவது கத்தோலிக்க விழாவின், இதோ மனிதன் என்ற தலைப்பு, பிறரின் தேவைகளுக்குக் கவனமாய் இருப்பதை வலியுறுத்துகின்றது என்று கூறினார்.

ஒவ்வொரு மனிதரும், பிறரோடு அமைதியில் வாழவே விரும்புகிறார், ஆனால், ஒவ்வொருவரும் தங்கள் இதயங்களில் அமைதியை ஊக்குவித்தால் மட்டுமே, இது சாத்தியமாகும் என்றும், காணொளிச் செய்தியில் பேசினார் திருத்தந்தை.

தியானம் மற்றும் செபத்தின் வழியாக, நாம் கடவுளுக்கு மிக நெருக்கமாக வர இயலும், அவர் நமக்குக் காட்டும் அன்பையும், இரக்கத்தையும் உணர முடியும், ஆனால், பல நேரங்களில், வயதானவர்கள், நோயாளர்கள், வேலைவாய்ப்பற்றவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் தவறாக நடத்தப்படுவதையும், மாண்பு புறக்கணிக்கப்படுவதையும் பார்க்கிறோம், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்க்கு குரல் கொடுக்க நேரம் ஒதுக்குமாறும், இவ்விழாவில் கலந்துகொள்பவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இப்புதனன்று தொடங்கியுள்ள இந்த கத்தோலிக்க நாள்(Katholikentag) விழா, வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இந்த கத்தோலிக்க நாள், 1848ம் ஆண்டில் முதலில் சிறப்பிக்கப்பட்டது. கத்தோலிக்கரும், பிற மத மரபினரும், அரசியல், கலாச்சார மற்றும் தொழிலதிபர்களுடன் உரையாடல் நடத்துவதற்கு உதவியாக இவ்விழா சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.