2016-05-26 15:36:00

சிரியா கடற்கரையோர நகரங்களை ஐ.எஸ். சேதப்படுத்திவிட்டது


மே,26,2016. சிரியா நாட்டின் Tartous, Jableh ஆகிய கடற்கரையோர நகரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய பன்முனைத் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களைச் சென்றடைவது கடினமாக உள்ளது என்று கவலை தெரிவித்தார் அப்பகுதி ஆயர் Antoine Chbeir.

பல்லாயிரக்கணக்கான சிரியா மக்கள் அடைக்கலம் தேடியிருக்கும் இந்நகரங்களில் கடந்த திங்களன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏறத்தாழ 650 பேர் காயமடைந்தனர் என்றுரைக்கும் ஆயர் Antoine அவர்கள், முதல் முறையாக இந்நகரங்களில் இடம்பெற்றுள்ள தாக்குதல்களால் மக்கள் பெரிய அளவில் புலம்பெயரக் கூடும் என்றார்.

இரஷ்யாவின் ஆதரவுடன், சிரியா அரசு பாதுகாத்துவந்த இந்நகரங்களில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்து, இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகளை, அருள்பணியாளர்களும், மக்களும் ஆற்றி வருகின்றனர் என்றார் ஆயர்.

காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் என்று பாராது, அவர்கள் மனிதர்கள் என்று நினைத்து பணியைச் செய்கிறோம், இந்த மே மாதத்தில், அன்னை மரியாவிடம் உதவி வேண்டுகிறோம் என்றும் ஆயர் தெரிவித்தார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.