2016-05-25 16:01:00

திருத்தந்தை : சிறாரைக் காப்பது ஒவ்வொருவரின் கடமை


மே,25,2016. சிறாரை, குறிப்பாக, முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்ற, மனித வர்த்தகத்திற்கு உள்ளாகின்ற மற்றும் மாறுபட்ட நடத்தைகளின் ஆபத்துக்களை எதிர்நோக்கின்ற சிறாரைக் காப்பது, நம் ஒவ்வொருவரின் கடமை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர் கூறினார்.

மே,25, இப்புதனன்று, அனைத்துலக காணாமல்போன சிறார் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, இவ்வேண்டுகோளை முன்வைத்த  திருத்தந்தை, ஒவ்வொருவரும் தங்களின் அன்புக்குரிய குழந்தைகளிடம் பாசமுடன் வாழுமாறும், இம்மறைக்கல்வியுரையில் கலந்துகொண்டவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தங்களின் குடும்பங்கள் மற்றும் சமூகச் சூழல்களிலிருந்து விலகி இருக்கும், வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்க இயலாமல் இருக்கும், அமைதியான சூழலில் வாழ இயலாமல் இருக்கும், பயன்படுத்தப்படும், தங்களையொத்தவர்கள் மத்தியில் புறக்கணிக்கப்படும் சிறார் என, பல்வேறு நிலைகளில் சிறார் எதிர்கொள்ளும் துன்பங்களை அகற்றுவதற்கு, அரசு மற்றும் சமய அதிகாரிகள் தங்கள் மனச்சான்றைத் தட்டி எழுப்புவார்களாக என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் நகரில், ஆறு வயதுச் சிறுவன் Etan Patz, காணாமல்போன நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், 1983ம் ஆண்டில், அப்போதைய அரசுத்தலைவர் ரோனல்டு ரேகன் அவர்கள், அச்சிறுவன் காணாமல்போன மே 25ம் தேதியை தேசிய காணாமல்போன சிறார் தினமாக அறிவித்தார்.

1998ம் ஆண்டிலிருந்து மே 25ம் தேதி, அனைத்துலக காணாமல்போன சிறார் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.