2016-05-25 16:31:00

ஜெனீவா 69வது உலக நலவாழ்வு மாநாட்டில் திருப்பீடம்


மே,25,2016. ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகளில் ஒருவரும் ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கும், மனிதரும், மனித மாண்பும் மதிக்கப்படுவதற்கும் கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையையும், உறுதியையும் திருப்பீடப் பிரதிநிதிகள் குழு வரவேற்கின்றது என்று கூறினார் திருப்பீட அதிகாரி ஒருவர்.

ஜெனீவாவில் இத்திங்களன்று ஆரம்பித்துள்ள 69வது உலக நலவாழ்வு மாநாட்டில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய, திருப்பீட நலவாழ்வுத் துறையின் செயலர் பேரருள்திரு Jean-Marie Mupendawatu அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்டத்தில், 17 திட்டங்களும், அதனுடன் தொடர்புடைய 169 இலக்குகளும் உள்ளன, இவை, இந்தப் புவிக்கும், இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழலுக்கும் உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் பேரருள்திரு Mupendawatu. 

எய்ட்ஸ், ஷயரோகம், மலேரியா, மற்றும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களை ஒழிப்பதற்கு கத்தோலிக்க நலவாழ்வு அமைப்புகள் ஆற்றிவரும் பணிகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், வருகிற ஜூன் 9,10 தேதிகளில் தொழுநோய் ஒழிப்பு குறித்து உரோமையில் நடைபெறவுள்ள கருத்தரங்கு பற்றியும் குறிப்பிட்டார்.

திருப்பீட நலவாழ்வுத் துறை, வருகிற நவம்பர் 10 முதல் 12 வரை வத்திக்கானில் நடத்தும் 31வது அனைத்துலக கருத்தரங்கு, அபூர்வ நோய்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்ற தலைப்பில் இடம்பெறவிருப்பது குறித்தும் பேசினார் பேரருள்திரு Mupendawatu.

194 உறுப்பு நாடுகளிலிருந்து ஏறத்தாழ மூவாயிரம் பேர் கலந்துகொள்ளும் இம்மாநாடு மே 28, வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.