2016-05-25 16:10:00

இரக்கத்தின் தூதர்கள் – அறிமுகம்


மே,25,2016. "ஒருவர் முத்திப்பேறு பெற்றவர் அல்லது அருளாளர் என்றோ, 'புனிதர்' என்றோ அறிவிக்கப்படும்போது, அது, அப்பழுக்கற்ற உன்னதத்தைப் பற்றிய அறிவிப்பு அல்ல. அந்த மனிதர் எவ்விதக் குறையும், பாவமும் அற்றவர் என்ற அறிவிப்பும் அல்ல... ஆனால், அருளாளராக, புனிதராக ஒருவர் அறிவிக்கப்படும்போது, அவர் கடவுளின் கருணையை, இறைவனின் இரக்கத்தைச் சார்ந்து, அவருடன் வாழ்ந்தார்; கடவுளின் சக்தியை நம்பி, தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்; முடியாதது என்பதும், முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தார்; தன் பகைவர்களையும், தன்னைத் துன்புறுத்தியவர்களையும் மன்னித்து வாழ்ந்தார்; வன்முறைகள், தீமைகள் அவரைச் சூழ்ந்தாலும், இறைவன்மீது நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்தார்; இறுதியில், அவர் இவ்வுலகம் விட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச் சென்றார் என்பதே அந்த அறிவிப்பில் அடங்கியுள்ளது". இவ்வாறு, கனடாவில், 'உப்பும், ஒளியும் (Salt and Light)' என்ற ஒரு தொலைக்காட்சி மையத்தை நடத்திவரும் அருள்பணியாளர் தாமஸ் ரொசிக்கா (Thomas Rosica) என்பவர் வெளியிட்டுள்ள “கனடா நாட்டிற்கான புனிதர் - இரண்டாம் ஜான் பால் (John Paul II - A Saint for Canada)” என்ற ஓர் அழகிய நூலின் அறிமுகப் பக்கங்களில் அவர் எழுதியுள்ள சில எண்ணங்கள் இவை. ஒருவரின் புனிதத்தைப் புரிந்துகொள்ள இவை உதவியாக உள்ளன:

அன்பர்களே, அருள்பணி ரொசிக்கா அவர்கள் எண்ணப்படி, கத்தோலிக்கத் திருஅவையில், ஒருவர் புனிதர் என்று அறிவிக்கப்படும்போது, அந்த மனிதர், எவ்விதக் குறையும் இல்லாதவர், பாவம் எதுவும் செய்யாதவர் என்று அர்த்தம் அல்ல... ஆனால், அவர் கடவுளின் கருணையை, இறைவனின் இரக்கத்தைச் சார்ந்து, கடவுளோடு இணைந்து வாழ்ந்தார் என்பதாகும். இப்படி அந்த மனிதர் வாழ்ந்ததோடு, அதைத் தனது வாழ்விலும் வெளிப்படுத்தினார் என்பதாகும். புனிதர்கள், இறைவனின் இரக்கத்தைத் தங்கள் வாழ்வில் சுவைத்ததோடு, அதைப் பிறரும் அனுபவிக்கச் செய்துள்ளனர். திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இறைவனின் இரக்கத்தை, பல்வேறு சமூக மற்றும் ஆன்மீக இரக்கச் செயல்கள் வழியாக அதிகமாக வெளிப்படுத்துவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். இப்படி வாழ்ந்தவர்கள், இரக்கத்தின் தூதர்கள், இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இறைஇரக்கம் என்றவுடன், முதலில் நம் நினைவுக்கு வருபவர் அன்னை மரியா. கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிடவே, தானாகவே முன்வந்து அக்குறையைத் தீர்த்து, புதுமணத் தம்பதியருக்கு ஏற்படவிருந்த அவப்பெயரை நீக்கியவர் அன்னை மரியா. அந்நேரம் தொடங்கி, இன்றுவரை, தம் பிள்ளைகள் துன்புறும்போது, அவர்களின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருப்பவர் அன்னை மரியா. இதற்கு உலகெங்கும் இருக்கின்ற அன்னை மரியா திருத்தலங்களில் குவியும் பக்தர்களே சான்று.

இரண்டாம் உலகப் போரில் நாத்சி வதை முகாமில், ஒரு கைதிக்காக, தனது உயிரைத் தியாகம் செய்தவர் புனித மாக்ஸ்மிலியன் கோல்ப். தென் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆப்ரிக்க அடிமைகள் மீது அளவுகடந்த அன்பு காட்டியவர் புனித பீட்டர் கிளாவர். அறுபது இலட்சம் டாலர் செலவழித்து, 1,200 ஆப்ரிக்க அடிமைகளை மீட்டவர் புனித வின்சென்ட் தெ பவுல். மனநோயாளர்கள் மற்றும் தொழுநோயாளர்களுக்கு இல்லம் அமைத்தவர் இவர். பாதையில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரருக்கு, தனது ஆடையை கிழித்துக் கொடுத்தவர் தூர் நகர் புனித மார்ட்டின். வருகிற செப்டம்பர் 4ம் தேதி, புனிதர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கும் அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், ஆற்றிய இரக்கச் செயல்கள், அவர் வாழ்ந்தபோதே அவரைப் புனிதராகப் போற்றச் செய்தன.  

அருளாளர் அன்னை தெரேசா, கொல்கத்தா நகர், மோத்திஜியில் சேரியில் குடியேறிய இரண்டாம் நாள் அது. முதல் நாள் அந்தச் சேரிக்கு வராத குடிகாரர் ஒருவர், மறுநாள் தனது குடிசைப் பக்கம் வந்தபோது, ஒரு குடிசையிலிருந்து, சில சிறார் வங்காள மொழியில் உரத்த குரலில் அ, ஆ.. எனச் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்நாள்வரை சேரியில் அவர் கண்டிராத காட்சி அது. சிறாரின் அந்தச் சப்தம் அக்குடிசைப் பக்கம் அவரை ஈர்த்தது. அவருக்கு மனைவி இல்லை. ஒரு மகன் மட்டுமே. இவர் தன்னிலே நல்ல மனிதர்தான். நன்றாகப் பாடுபட்டு உழைப்பார், ஆனால், குடிக்காமல் மட்டும் அவரால் இருக்க முடியாது. குடித்துவிட்டால் எங்காவது விழுந்து புரண்டு கொண்டிருப்பார். கையில் காசு இல்லாமல், குடிக்காமல் இருக்கும் நாள்களில் மட்டும் தனது மகனைப் பார்க்க ஆசை வரும். அதனால், குடிசைப் பக்கம் வருவார். அப்படிப்பட்ட ஆசையோடு, இனிப்புப் பதார்த்தங்களை வாங்கிக்கொண்டு அன்று வந்திருந்தார்.

அந்தக் குடிசையைக் கடந்து செல்ல நினைத்தவர் ஒரு கணம் அங்கு நின்று, அன்னை தெரேசாவிடம், நீங்க யாரு என்றார். நான் ஓர் ஏழை, நான் ஓர் ஆசிரியை என்றார் அன்னை தெரேசா. ஆமா, பணக்காரங்களா இங்க வருவாங்க என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தனது அப்பாவின் குரல் கேட்டு, அக்குடிசையிலிருந்து வெளியே வந்தான் சிறுவன். அப்பா, இந்த டீச்சர் ரொம்ப நல்லவங்க, பணமில்லாமலே பாடம் சொல்லித்தாராங்க, இதற்காகத்தான் இங்கே வந்திருக்காங்க என்றான். குடிகாரரின் கண்களிலிருந்து நீர் கொட்டியது. டீச்சரம்மா, தயவுசெய்து என் மகன் என்னைப்போல் ஆகக் கூடாது, நீங்கதான் காப்பாத்தணும் என்று, அன்னையின் கால்களில் வீழ்ந்தார். தான் வைத்திருந்த இனிப்புக்களை அன்னையிடம் கொடுத்தார். அன்னை அவற்றைச் சிறார்க்குப் பகிர்ந்து கொடுத்தார். அந்நாள் முதல் அந்தக் குடிகாரர் குடியை நிறுத்தி புது மனிதரானார். தனது பொறுப்பை உணர்ந்து பணம் சேமித்தார். தனது மகனின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தார். அந்தச் சேரியில் பள்ளி ஒன்றுக்கு அனுமதி கேட்டார் அன்னை தெரேசா. அதுவும் கிடைத்தது.         

இச்செவ்வாயன்று, தமிழகத்தில் சாராயக் கடைகள் திறப்பதற்காக வெகுநேரம் வேகாத வெயிலில் காத்திருந்து, பகல் 12 மணிக்குத் திறந்தவுடன் குபுகுபுவென முண்டியடித்துக்கொண்டு ஓடிய நம் “குடி”மகன்களைத் திருத்த பல அன்னை தெரேசாக்கள் உருவாகட்டும். அன்பர்களே, அன்னை தெரேசா போன்று, இரக்கத்தின் தூதர்களாக வாழ்ந்த பல புனிதர்கள் பற்றி, இரக்கத்தின் தூதர்கள் என்ற புதிய தொடரில் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். முதலில் அன்னை தெரேசா வாழ்வு பற்றி சற்று விரிவாகவே, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கேட்போம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளது போன்று, தேவையில் இருப்போர்க்கு, இரக்கத்தின் தூதர்களாகச் செயல்படுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.