2016-05-25 15:41:00

இது இரக்கத்தின் காலம்– துன்பத்தை உணர்ந்தவர்களே உதவ முடியும்


” Gone too soon ”  அதாவது, ‘சீக்கிரமே மறைந்து விட்டாய்’ என்பது மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று. எய்ட்ஸ் நோய் பாதித்திருந்த ஒரு சிறுவன் பதினோரு வயதிலேயே இறந்துபோனபோது, ஜாக்ஸன், அவன் நினைவாக அந்தப் பாடலைப் பாடினார். உள்ளத்தை உருக்கும் குரலில் அந்தப் பாடலின் இசையும், பாடல் வரிகளும், படக்காட்சியும், எய்ட்ஸ் நோயைப் பற்றிய செய்திகளை அழுத்தமாக உலகத்துக்கு எடுத்துக் கூறின.

மைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் இப்படிச் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது போன்றவை மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புக்கள் என்று, அவருடைய இசை இரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது.

ஜாக்ஸனின் சிறு வயதுப் பருவத்தை நோக்கினால், அது, துயரம் நிறைந்ததாகவே இருந்தது. இந்தியானா மாநிலத்தில் ஒரு புறநகர் தொழிற்பேட்டைப் பகுதியில் பிறந்தார் மைக்கேல் ஜோசப் ஜாக்ஸன். தந்தை ஒரு மில் தொழிலாளி. அவரைப் போன்ற அராஜகத் தந்தையைப் பார்க்க முடியாது. தன்னுடைய ஐந்து ஆண் குழந்தைகளையும் அவர் பாடாய்ப் படுத்துவார். மைக்கேல் ஜாக்சன் வளர்ந்து பெரிய அளவில் சம்பாதிக்கத் தொடங்கியபோது, தொண்டு நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நிதியுதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருந்ததற்கு, தான் இளவயதில் வாழ்வில் அனுபவித்த துன்பங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.  உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.

துன்பங்களை அனுபவித்தவர்கள், பிறர் துன்பங்களை உணர்வது எளிது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.