2016-05-24 16:08:00

“நலமான பூமிக்கோளம், நலமான மக்களுடன்” மாநாடு


மே,24,2016. ஆப்ரிக்க நாடாகிய கென்யத் தலைநகர் நைரோபியில், ஐ.நா.வின் 2வது சுற்றுச்சூழல் மாநாடு(UNEA-2), “நலமான பூமிக்கோளம், நலமான மக்களுடன்” என்ற தலைப்பில், இத்திங்களன்று ஆரம்பித்துள்ளது.

மே 27, வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இம்மாநாட்டில், உணவுப்பொருள் வீணாக்கப்படுதல், பெருங்கடல்கள் அசுத்தமடைதல், நுகர்வுகள் அதிகரித்தல் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவுகொள்ளும் காற்று மாசுக்கேடு, காடுகளில் சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் மர வர்த்தகத்தால், உயிரினங்கள் அழியும் ஆபத்து போன்ற, இப்புவி எதிர்கொள்ளும் முக்கிய விவகாரங்களும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன.

2012ம் ஆண்டில், ஒரு கோடியே 26 இலட்சம் பேர் சுற்றுச்சூழல் மாசுகேட்டால் உயிரிழந்தனர். உலகில், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், 2030க்கும், 2050ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், மேலும் 2,50,000 பேர் உயிரிழப்பார்கள் என்று உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.