2016-05-24 10:42:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 23


இயேசுவின் மனித உணர்வுகளை, குறிப்பாக, அவர் கொண்டிருந்த இரக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் புதுமைகளில், நம் தேடல் பயணம், கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வந்துள்ளது. இயேசு, தொழு நோயாளியைக் குணமாக்கியப் புதுமையில் இன்று நம் தேடலை மேற்கொள்கிறோம். இப்புதுமையை நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் விவரித்துள்ளார்.

லூக்கா நற்செய்தி, 5/12-14

இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார். இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிட்டார்.

இந்த நற்செய்திப் பகுதியில், தொழுநோயாளியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் நம் கவனத்தை முதலில் ஈர்க்கின்றன.  தொழுநோயாளி, அவர், இவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்; அவன், இவன் என்றல்ல. நாம் பயன்படுத்திய பழைய மொழிபெயர்ப்பில் அவன், இவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போதைய மொழிபெயர்ப்பில், தொழுநோயாளியை ஒரு மனிதராகப் பாவித்து அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. இது, கடந்த சில ஆண்டுகளாக நாம் பின்பற்றும் அழகான பழக்கம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்தே பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

இயேசுவின் இந்தப் புதுமையைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னால், தொழுநோயாளி என்ற வார்த்தையைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். பழையத் தமிழில் தொழுநோய் உள்ளவர்களைக் குறிக்க, ‘குஷ்டரோகி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்ல வேளையாக ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான வார்த்தைகளை, அதாவது, தொழுநோயாளி,  leprosy patient என்ற சொற்களை இப்போது பயன்படுத்துகிறோம்.

குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொல்லும்போது இந்த நோய் உடையவர்கள் மனிதப் பிறவியிலிருந்து ஒரு படி... ஏன், பல படிகள் தாழ்ந்த  நிலையில் உள்ள ஒரு பிறவியாக  நினைத்தோம், அவர்களை அப்படியே நடத்தினோம். சாதிய மடமை வெறியில் வாழும் இந்திய சமுதாயத்தில், ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்கள், ஏதோ பிறவியிலேயே குறையுடன் பிறந்தவர்கள் போல, அவர்களைப் பார்க்கும் விதம், அவர்களோடு பழகும் விதம் இவற்றில் வேறுபாடுகள் காட்டுவது, இந்திய சமுதாயத்தின் சாபக்கேடு.

குஷ்டரோகி என்பதற்கும், தொழுநோயாளி என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். Leper என்பதற்கும் leprosy patient என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஆங்கிலத்தில் பல வார்த்தைகளுக்கு நாம் மாற்று கண்டுபிடித்திருக்கிறோம். Servant என்ற சொல்லுக்கு domestic help, அல்லது domestic employee என்றும் handicapped  என்ற சொல்லுக்கு physically challenged அல்லது diffrently abled என்றும் மாற்றங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். வார்த்தைகள் என்ன அவ்வளவு முக்கியமா என்று உங்களில் சிலர் நினைக்கலாம். ஆம், அன்பு நண்பர்களே, உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயைவிட அதிக சூடானது வார்த்தைகள் என்றும் நாம் கேட்டிருக்கிறோம், உணர்ந்தும் இருக்கிறோம். நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், ஆழ்மனதில் உண்டாக்கும் எண்ணங்களுக்கும் அந்த எண்ணங்களிலிருந்து பிறக்கும் செயல்களுக்கும் வழிவகுக்கும்.

விவிலியத்தில் தொழுநோய் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது? முழு ஆராய்ச்சியில் ஈடுபட இப்போது நேரம் இல்லை. மேலோட்டமாக பாப்போம். பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதியான லேவியர் நூல், யூதர்கள் வாழ்விலும், சடங்குகளிலும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், சட்டங்கள் பற்றி கூறும் நூல். இந்நூலில் 13, 14 ஆகிய பிரிவுகள், தொழுநோய் பற்றி விவரமாகக் கூறுகின்றன. இந்த நோய் கண்டதும், குருக்களிடம் சென்று காட்டவேண்டும். நோயின் தீவிரத்தை ஆய்வுசெய்து, நோயாளி, தீட்டுபட்டவரா இல்லையா என்பதை குரு தீர்மானிப்பார். நோய் தீவிரமாக இருந்தால், நோயாளி, சமுதாயத்திலிருந்து விலக்கப்படுவார். நோய் குணமானதும், மீண்டும் குருவிடம் காட்டி, அவர் சம்மதம் அளித்தபின்னரே அவர் சமுதாயத்தில் சேர்க்கப்படுவார். இதை மனதில் கொண்டே, இயேசு தொழு நோயுற்றவரை குணமாக்கியதும், அவர் குருவிடம் சென்று சான்றிதழ் பெறவேண்டும் என்று பணித்தார்.

இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிட்டார்.

அன்பர்களே, விவிலியத்தில் பரிசுத்தம், புனிதம் என்ற வார்த்தைகளும், நலம் அல்லது சுகம் என்ற வார்த்தைகளும் ஒரே அடிப்படை வார்த்தையிலிருந்து வந்தவை. ‘கடோஷ்’ (Kadosh) என்ற எபிரேய சொல்லுக்கு, இறைமை, முழுமை என்ற அர்த்தங்கள் உண்டு. எதெல்லாம் முழுமையாக, நலமாக உள்ளனவோ, அவையெல்லாம் பரிசுத்தமாக, புனிதமாக கருதப்பட்டன.

இந்த அடிப்படையில்தான், நலம் இழந்தோரை இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், புனிதம் இழந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர், யூதர்கள். அதிலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பாவிகள் என்ற கண்டனம் எழுந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியதை லேவியர் நூல் இவ்வாறு கூறுகிறது:

லேவியர் நூல் 13, 45-46

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

தொழு நோயாளிகள் பற்றிய எண்ணங்கள் மிக கொடுமையானவை. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்க வேண்டும், ஊருக்குள் வர வேண்டிய அவசியம் இருந்தால், ஒரு மணியை ஒலித்தவாறு வரவேண்டும். இந்த மணி சப்தம் கேட்டதும் எல்லோரும் விலகிவிடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்கள் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி மிகுந்த தண்டனை அனுபவித்திருக்கலாம். கல்லெறி பட்டு, இறந்திருக்கலாம்.

இந்தப் பின்னணியில், இந்தப் புதுமையைக் கற்பனை செய்து பார்ப்போம். இயேசுவைச் சுற்றி எப்போதும் ஒரு சின்ன கூட்டம் இருந்தது. அந்நேரத்தில் அங்கு வந்த தொழுநோயாளியின் நிலையைக் கற்பனை செய்வோம். அவர் மனதில் எவ்வளவு போராட்டம் இருந்திருக்கும்? அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்த கோபம் வெறியாக மாறினால், கல்லெறிபட்டு சாகவும் நேரிடும் என்று தெரிந்தும், அந்தத் தொழுநோயாளி இயேசுவிடம் வருகிறார்.

இயேசு, தூரத்தில் இருந்தபடி வார்த்தைகளை கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி, அவரைத் தொடுகிறார். இயேசுவின் இச்செயல், சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக அவர்களும் நலம் பெற வேண்டும் என்பதே அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு மக்களில் பலரை மிருகங்களிலும் கேவலமாக நடத்தும் தன் இன மக்களைக் குணமாக்கவே இயேசு இதைச் செய்தார். தொழுநோயாளி குணமானார் என்று நற்செய்தியாளர் வெளிப்படையாகச் சொல்கிறார். இயேசுவைச் சுற்றி இருந்தவர்களும் குணமாயினர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். கும்பகோணத்தில் உள்ள தொழு நோய் மருத்துவமனையில், இருபது ஆண்டுகளுக்கு முன், ஒரு மாதம் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. தொழுநோய் பற்றி எனக்குள் இருந்த பல பயங்களை இந்த பணி மாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு. பல மாற்றங்கள் நடந்தது உண்மை. இருந்தாலும், ஆழ்மனதில் இருந்த, இன்னும் இருக்கும் பயங்கள் இன்னும் சுத்தமாக நீங்கவில்லை என்பதும் உண்மை.

நான் அங்கு பணி செய்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் மாலை தொழுநோய் கண்ட குழந்தைகளுடன் விளையாடும் சூழ்நிலை உருவானது. அந்நேரத்தில் ஒரு குழந்தை என்னிடம் ஒரு மிட்டாயை நீட்டியது. வாங்குவதா வேண்டாமா என்ற போராட்டம். தைரியமாக வாங்கினேன். பைக்குள் வைத்துக்கொண்டேன். அறைக்குள் சென்றபின், அதைச் சாப்பிடலாமா அல்லது, குப்பைத் தொட்டியில் போடலாமா என்ற போராட்டம். அந்த போராட்டத்தையும் வென்று, அந்த மிட்டாயைச் சாப்பிட்டேன். இது ஒரு சின்ன போராட்டம் தான். இருந்தாலும், என்னுடைய ஒரு மாத பணி அனுபவத்தில் ஓர் உச்சக்கட்டம் என்று சொல்லலாம். இந்த நோய் பற்றிய எண்ணங்களில், சின்னதாக எனக்குக் கிடைத்த ஒரு விடுதலை என்று சொல்லவேண்டும்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் தொழுநோய் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டதென உலக நலவாழ்வு நிறுவனமான WHO, இரு ஆண்டுகளுக்கு முன் – 2014 - அறிவித்தது. இந்நோய் முற்றிலும் நீக்கப்படாத ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நோயை முற்றிலும் நீக்கும் முயற்சிகள், உலகெங்கும் இடம்பெற வேண்டும் என்று மன்றாடுவோம். இந்நோய் கண்டவர்களை மனிதப் பிறவிகளாகக் கருதவும், பரிவுடன் அவர்களுடன் பழகவும் நமக்குள் தெளிவுகளை உருவாக்க, இறைவனின் அருளை வேண்டுவோம். தொழுநோயாளியைத் தொட்டுக் குணமாக்கிய இறைமகன் இயேசு, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் நமக்கு இந்தத் தெளிவை அருள்வாராக! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.