2016-05-24 15:53:00

2018ல் டப்ளினில் 9வது உலக குடும்பங்கள் மாநாடு


மே,24,2016. அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 22 முதல் 26 வரை நடைபெறவிருக்கும் 9வது உலக குடும்பங்கள் மாநாடு குறித்து, திருப்பீட குடும்ப அவைத் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா (Vincenzo Paglia), டப்ளின் பேராயர் டியர்மிட் மார்ட்டின்(Diarmuid Martin) ஆகிய இருவரும், இச்செவ்வாயன்று பத்திரிகையாளர்களிடம் விளக்கினர்.

2015ம் ஆண்டில் வத்திக்கானில் நடந்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்குப் பின்னர், திருஅவையில் நடக்கவிருக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான டப்ளின் உலக குடும்பங்கள் மாநாடு, அகிலத் திருஅவைக்கும், அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடும்பங்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வு என்றார் பேராயர் மார்ட்டின்.

அயர்லாந்து நாடு உறுதியான குடும்பக் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கின்றது, இது ஓர் இளமையான நாடு, இங்கு மொத்த மக்கள்தொகையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் 21.6 விழுக்காடு, அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் 16.9 விழுக்காடு என்றும், அந்நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையும் இத்தாலியைவிட அதிகம் என்றும் கூறினார் பேராயர் மார்ட்டின்.

இந்த 9வது உலக குடும்பங்கள் மாநாட்டிற்கு, திருத்தந்தை வருகை தருவது குறித்து இப்போது எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்றுரைத்த பேராயர், குடும்பங்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்த இம்மாநாடு நிச்சயமாக உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.  

“ குடும்பத்தின் நற்செய்தி, உலகின் மகிழ்வு” என்ற தலைப்பில் 9வது உலக குடும்பங்கள் மாநாடு நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.