2016-05-23 11:53:00

வாரம் ஓர் அலசல் – நிரந்தரமாகட்டும் மனிதாபிமானம்


மே,23,2016. கி.பி.72ம் ஆண்டில் கட்டப்பட்ட கொலோசேயும் கேளிக்கை அரங்கம், உரோம் நகரில் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த இடத்தில், 11 வயது கனடா நாட்டுச் சிறுமி காப்ரி எவெரிட்(Capri Everitt), ஒரு சிறு படலைக் கல் மீது நின்றுகொண்டு, இத்தாலிய தேசியக் கீதத்தைப் பாடிக்கொண்டிருந்தார். அவ்விடத்திற்குச் சென்ற நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதை வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அச்சிறுமியின் அப்பா, அம்மா, தம்பி ஆகிய மூவரும் உடன் நின்றனர். இந்தச் சிறுமி, எண்பது நாடுகளில், எண்பது தேசியக் கீதங்களை, 41 மொழிகளில் பாடும் திட்டத்தைக் கொண்டிருக்கிறார். இந்தக் குடும்பம் செல்வதற்குத் திட்டமிட்டுள்ள ஒவ்வொரு நாட்டிலும், தேசியக் கீதத்தைப் பாடுவது சிறுமி காப்ரியின் திட்டம். மே 20, கடந்த வெள்ளியன்று, 49வது நாடாக, இத்தாலியில் இவர் பாடியிருக்கிறார். இப்படி இச்சிறுமி ஒவ்வொரு நாட்டிலும் பாடும்போது, அவ்விடத்தில் சிறாரையும், தன்னருகில் நிற்க வைத்துக்கொண்டு பாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கனடா நாட்டு Everitt குடும்பத்தின் திட்டம் என்ன? எதற்காக இச்சிறுமி ஒவ்வொரு நாட்டிலும் பாடுகிறார்?

SOS சிறாரின் கிராமங்களில் பராமரிக்கப்படும், பெற்றோரை இழந்த மற்றும் கைவிடப்பட்ட சிறார்க்கென பத்து இலட்சம் டாலர் நிதி திரட்டுவதே, இந்தக் கனடாக் குடும்பத்தின் திட்டம். இதற்காக, இக்குடும்பம் உலகை ஒன்பது மாதங்கள் சுற்றி வருகின்றது. இவர்கள் தங்களின் கடைசி நிகழ்ச்சியாக, கனடாவின் Toronto நகரில், Blue Jays baseball விளையாட்டில், வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி தேசிய கீதம் பாடுவதாகும். இப்பிறரன்பு முயற்சியில், Everitt குடும்பத்தில் ஒவ்வொருவரும், தங்களின் திறமைகளைப் பயன்படுத்தி ஈடுபட்டுள்ளனர். சிறுமி Capri தவிர, அவரின் ஒன்பது வயது தம்பி Bowenம், இக்குடும்பத்தின் இணையதளத்தில், காணொளிப் படங்கள் வெளியிடுவது, மற்றும் blogல் எழுதுவது.. போன்வற்றைச் செய்து வருகிறார். உலகெங்கும் வாழும் சிறாரைச் சந்தித்து பிறரன்புப் பணியில் விழிப்புணர்வு ஊட்டுவது, Everitt குடும்பத்தின் திட்டம். இதுவரை இக்குடும்பத்தினர் சென்றுள்ள நாடுகள் பற்றி, Tom Everitt மற்றும் Kerrie Everitt தம்பதியர் கூறும்போது, இதுவரை எங்களின் பயணம் எங்களின் எதிர்பார்ப்பையும் கடந்து, நம்ப முடியாத அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளது என்று ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டனர். 

அன்பு இதயங்களே, Everitt குடும்பத்தினர் நிதி திரட்டும் SOS சிறாரின் கிராமங்கள் என்பது, ஓர் அரசு-சாரா உலகளாவிய வளர்ச்சி நிறுவனமாகும். ஆஸ்ட்ரிய நாட்டு Imst நகரில், Hermann Gmeiner என்பவரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், 1949ம் ஆண்டிலிருந்து, சிறாரின் தேவைகளையும், உரிமைகளையும் பாதுகாத்து வளர்ப்பதற்காக உழைத்து வருகிறது. உலகளாவிய நூறு அரசு-சாரா நிறுவனங்களில், இது 33வது இடத்தில் உள்ளது என, 2004ம் ஆண்டில் Financial Times இதழ் கூறியது. இதன் கிளைகள், இந்தியா உட்பட உலகெங்கும் 134 நாடுகளில் உள்ளன. பிரிந்து வாழும் பெற்றோரால், வீட்டு வன்முறையால், வீட்டில் புறக்கணிக்கப்படுவதால், போர் அல்லது இயற்கைப் பேரிடரால் பெற்றோரை இழந்த, எய்ட்ஸ் நோய் உட்பட பல நோய்களால் துன்புறும் சிறார் என, இலட்சக்கணக்கான சிறார்க்கு, SOS சிறாரின் கிராமங்கள் என்ற நிறுவனம், உதவி செய்து வருகிறது. இத்தகைய ஏறத்தாழ ஐம்பதாயிரம் சிறார் மற்றும் 15 ஆயிரம் இளையோர்க்கு, புதிய தாய்மாருடன், புதிய குடும்பத்தை அமைத்துக் கொடுத்துள்ளது இந்நிறுவனம். சில நேரங்களில் புதிய தாய் அல்லது புதிய அப்பா அம்மாக்களே இச்சிறார்க்குக் கிடைப்பதற்கு வழிசெய்யப்படுகின்றன.

இத்திங்கள், செவ்வாய் தினங்களில்(மே,23,24), துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெறும் ஐ.நா.வின் முதல் உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில்(WHS) கலந்துகொள்ளும், ஐந்தாயிரம், அரசுகள், மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளில், உலகளாவிய SOS நிறுவனப் பிரதிநிதிகளும் உள்ளனர். உலகின் வருங்கால மனிதாபிமானத் திட்டங்களில் சிறார்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்று, உலகத் தலைவர்களை, SOS சிறாரின் கிராமங்கள் நிறுவனம் வலியுறுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. இந்த உலகில், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் ஆயுத மோதல்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த உலக மாநாட்டை நடத்த ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் திட்டமிட்டார். ஐ.நா.வின் கணிப்புப்படி, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தற்போது, பெருமெண்ணிக்கையில், அதாவது, ஏறத்தாழ எட்டுக் கோடிப் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. தங்கள் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்ந்திருப்போர் ஏறத்தாழ ஆறு கோடி. இவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். 2015ம் ஆண்டில் ஐரோப்பாவில் புகலிடம் தேடியவர்களில் 90 ஆயிரம் பேர், யாருடைய உதவியுமின்றி வந்த சிறார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. மேலும், யூனிசெப் அறிக்கையின்படி, உலகிலுள்ள பள்ளிக்குச் செல்லும் வயதுடைய சிறாரில், ஏறத்தாழ நான்கு பேருக்கு ஒருவர், பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர்.   

மேலும், இஸ்தான்புல் உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில், எந்த ஒரு சிறாரும் பாதுகாப்பின்றி விடப்படக் கூடாது, உலகளாவிய வளர்ச்சி மற்றும் மனிதாபிமானத் திட்டங்களில் சிறார் பாதுகாப்பு முக்கிய அங்கம் வகிக்க வேண்டுமென SOS நிறுவனம் வலியுறுத்துகிறது.  உலகளாவிய கல்விக்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதராக விளங்கும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கோர்டன் ப்ரௌன் அவர்களை வைத்து ஒரு சிறப்பு நிகழ்வையும் SOS நிறுவனம் நடத்துகிறது. மேலும், உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில், ஐந்து முக்கிய கூறுகள் வலியுறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன. 1. போர்களைத் தடுப்பது, அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது, 2. போரின் சட்ட விதிமுறைகளை மதித்தல், 3. யாரும் ஒதுக்கப்படாமலிருத்தல், 4. தேவைகளை நிறைவேற்றுவதற்கு வித்தியாசமாகச் செயல்படுதல், 5. மனித சமுதாயத்தில் முதலீடு செய்தல் ஆகியவையாகும்.

குடும்பங்கள் முறிவுபடுவதற்கும், சிறார் துன்புறுவதற்கும், பெற்றோர் இழப்புக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று குடும்ப வன்முறை. அதனால் சிறாரும், சமுதாயமும் நலமாக வாழ முதலில், குடும்பத்தில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று SOS நிறுவனம் கூறுகிறது. உலகில், ஏறத்தாழ 27 கோடியே 50 இலட்சம் சிறார், வீடுகளில் வன்முறையை எதிர்கொள்கின்றனர்(யூனிசெப்2014). உலகிலுள்ள வயதுவந்தோரில் 25 விழுக்காட்டினர் சிறார் பருவத்தில் பயன்படுத்தப்பட்டவர்கள்(WHO 2014). 5 பெண்களில் ஒருவர், 13 ஆண்களில் ஒருவர், குழந்தைப் பருவத்தில் பாலியல் முறையில் பயன்படுத்தப்பட்டவர்கள்(WHO 2014). 2 வயதுக்கும் 12 வயதுக்கும் உட்பட்ட சிறாரில், பத்தில் ஆறு பேர், அவர்களைப் பராமரிப்பவர்களால் உடலளவில் தண்டிக்கப்பட்டவர்கள்(யூனிசெப் 2014). குடும்பங்கள் உட்பட, 49 நாடுகளில் மட்டுமே சிறார் உடலளவில் தண்டிக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே சிறார்க்கு எதிரான வன்முறை, உலகளாவிய பிரச்சனையாக உள்ளது என ஐ.நா. நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே, சிறார் நலன் குறித்து, உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில் முக்கியமாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், உலக மனிதாபிமான உச்சி மாநாட்டிற்காகச் செபித்தார். சண்டைகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் கடும் ஏழ்மையால் ஏற்பட்டுள்ள மனிதாபிமானச் சூழல்களைக் களையும் நோக்கத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள், யாரையும், குறிப்பாக, அப்பாவிகள் மற்றும் வாய்ப்பிழந்தவர்களை ஒதுக்காமல், ஒவ்வொரு மனிதரின் வாழ்வைப் பாதுகாக்கும் மனிதாபிமானத் திட்டங்களை வகுப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு செபிப்போம் என்று நம் எல்லாரையும் கேட்டுக்கொண்டார்.

அன்பு நெஞ்சங்களே, எமெர்சன் சொன்னார் - துன்பத்தைக் கண்டு இரங்குதல் மனிதாபிமானம்தான். ஆனால், அதை நீக்குதலோ தெய்வீகம் என்று. இலங்கையில் கடந்த வாரம் பெய்த கனமழையில் வீடுகளைவிட்டு வெளியேறியவர்க்கு, மனிதாபிமான உதவிகள் கிடைத்து வருகின்றன. இப்படி, பேராபத்து, நெருக்கடி நேரங்களில் மனிதாபிமானம் அதிகமாகவே வெளிப்படுகின்றது. தங்கள் உயிரையும்  பொருட்படுத்தாது பிறரைப் பாதுகாக்கும் பணிகளில் எல்லாரையும் நெஞ்சார நினைத்து இந்நேரத்தில் நன்றி சொல்வோம். வாழ்த்துவோம். அதேநேரம், நமக்கு இன்று அதிகம் தேவைப்படுவது நிரந்தரமான மனிதாபிமானம். பெரியோர்கள் உதிர்த்த சில பொன்மொழிகள் இதோ...

மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்து பார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே. மணிக்கணக்கில் போதிப்பதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல். நீ கொடுக்க வேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு நான்கு மடங்காகத் திருப்பித் தரப்படும். எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய். நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் தலைமுறையை நன்றாக வழிநடத்தும்.

அன்பர்களே, நம் மனிதாபிமானம், நெருக்கடி, ஆபத்து நேரங்களில் மட்டுமல்லாமல், அது தேவைப்படும் எல்லா நேரங்களில் வெளிப்படும் நிரந்தரமான பண்பாக நம்மில் ஒளிரட்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.