2016-05-23 14:59:00

மூவோர் இறைவன் பிறரோடு ஒருமைப்பாட்டுடன் வாழ அழைக்கிறார்


மே,23,2016. ஒன்றிப்பு, ஆறுதல் மற்றும் இரக்கப் பண்புகளை ஊக்குவிப்பதன் வழியாக, ஒவ்வொரு நாளும் நம் உறவுகளை வளப்படுத்த, மூவோர் இறைவன் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மூவோர் இறைவன் பெருவிழாவான இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஒன்றித்துள்ள இறைவனின் சாயலாகவும், பாவனையாகவும் படைக்கப்பட்டுள்ள நாம், தோழமையுணர்விலும், ஒருவரையொருவர் அன்புகூருவதிலும் வாழ வேண்டியவர்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார்.

இந்தப் பணியில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள தூய ஆவியாரால் உறுதிப்படுத்தப்படுகிறோம் என்றும், அநீதி, அடக்குமுறை, காழ்ப்புணர்வு, பேராசை ஆகியவற்றால் காயமடைந்துள்ள மனித சமுதாயத்தை, இது குணப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, ஆறுதலும், இரக்கமும் நிறைந்த நம் உறவுகள், திருஅவை சமூகங்கள், குடும்பங்கள், நண்பர் வட்டங்கள், உடன்வேலை செய்பவர்கள், ஒத்த சிந்தனை கொண்டவர்கள் என, எல்லா இடங்களிலும் வெளிப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மேலும், கோசென்சாவில் முத்திப்பேறுபெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ள மறைமாவட்ட அருள்பணியாளர் பிரான்செஸ்கோ மரிய கிரேக்கோ அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வுக்கு நன்றி சொல்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்குப் பலத்த கைதட்டல் எழும்பியவுடன், இந்தக் கைதட்டல், இத்தாலியிலுள்ள பல நல்ல அருள்பணியாளர்களுக்கும் சேர்த்துத்தான் என்றார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.