2016-05-23 14:44:00

கிறிஸ்தவரின் அடையாள அட்டை நற்செய்தியின் மகிழ்வு


மே,23,2016. ஒரு கிறிஸ்தவர் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்க முடியாது, ஏனென்றால், வாழ்வின் துன்பங்களில்கூட, இயேசுவை எப்படிச் சார்ந்திருப்பது மற்றும் நம்பிக்கையோடு எப்படி வாழ்வது என்பதை, கிறிஸ்தவர் அறிந்திருக்கிறார் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியில், புனித பேதுருவின் முதல் மடலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தை(1பேது.1,3-9) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

நாம் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும், கடவுள் நம்மில் வைத்துள்ள மகிழ்வை ஒருபோதும் எடுத்துவிட இயலாது, ஏனென்றால், நாம் கிறிஸ்துவில் புதுப்பிறப்படைந்துள்ளோம் மற்றும் நம்பிக்கை நமக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவால் மீண்டும் புதுப்பிறப்படைந்து, அவரால் மீட்கப்பட்டு, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்ற நற்செய்தியின் மகிழ்வு, கிறிஸ்தவரின் அடையாள அட்டை என்றும் கூறிய திருத்தந்தை, வாழ்வின் துன்பங்களிலும்கூட, இயேசு எனக்காகக் காத்திருக்கிறார் என்ற நம்பிக்கையின் மகிழ்வு கிறிஸ்தவர்க்கு உள்ளது என்றும் கூறினார். 

இயேசு என்னோடு, எனக்காக இருக்கிறார் என்ற உறுதி, அமைதியை அளிக்கின்றது என்றும், செல்வத்திற்குச் சேவை செய்வது, இறுதியில் வருத்தத்தையே தரும் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

இறுதியில் வருத்தத்தையே தரும் பொருள்களில் மகிழ்வைத் தேடாதீர்கள் என்று எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர் என்பவர், ஆண்டவரில் மகிழ்பவர், வியப்பின் மனிதர் என்றும் தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.