2016-05-23 15:07:00

உலக மனிதாபிமான உச்சி மாநாட்டிற்கு திருத்தந்தை செபம்


மே,23,2016. இத்திங்களன்று இஸ்தான்புல் நகரில் தொடங்கியுள்ள உலக மனிதாபிமான உச்சி மாநாட்டிற்காக, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சண்டைகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் கடும் ஏழ்மையால் ஏற்பட்டுள்ள மனிதாபிமானச் சூழல்களைக் களையும் நோக்கத்தில் இம்மாநாடு நடைபெறுகின்றது, இதில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள், ஒருவரையும், குறிப்பாக, அப்பாவிகள் மற்றும் வாய்ப்பிழந்தவர்களை ஒதுக்காமல், ஒவ்வொரு மனிதரின் வாழ்வைப் பாதுகாக்கும் மனிதாபிமானத் திட்டங்களை வகுப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இன்னும், இந்த ஐ.நா. உலக மாநாட்டில் கலந்து கொள்வதற்கென, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையிலான, திருப்பீட உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த முதல் உலக மனிதாபிமான உச்சி மாநாடு நடைபெறுவது குறித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் அறிவித்தார். இதற்குத் தயாரிப்பாக, 150க்கும் மேற்பட்ட நாடுகளில், 23 ஆயிரம் மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது என்று ஐ.நா. அதிகாரிகள் கூறினர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.