மே 23,2016. வருகிற செப்டம்பர் 4ம் தேதி, வத்திக்கானில், அருளாளர் அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்படும் திருப்பலியில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னை தெரேசா பிறரன்பு மறைப்பணியாளர் சபை சகோதரிகளின் அழைப்பின்பேரில், மம்தா பானர்ஜி அவர்கள், இம்முடிவை எடுத்துள்ளார்.
வருகிற செப்டம்பர் 4ம் தேதி காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், அருளாளர் அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்படும் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுடன், அன்னை தெரேசா பிறரன்பு மறைப்பணியாளர் சபைத் தலைவர் அருள்சகோதரி பிரேமா, கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா, பல உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அன்னை தெரேசா தலைமை இல்லத்தோடு தொடர்புடைய தனிநபர்கள் என, ஒரு பிரநிதிகள் குழு இத்திருப்பலியில் கலந்துகொள்ளும்.
1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறந்த அன்னை தெரேசாவை, 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |