2016-05-20 15:48:00

பள்ளி செல்லாத கிறிஸ்தவச் சிறார் எண்ணிக்கை குறித்து அதிர்ச்சி


மே,20,2016. இந்தியாவில், 2014ம் ஆண்டில், குறைந்தது 62 ஆயிரம் கிறிஸ்தவச் சிறார், பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியிருந்தனர் என்ற, அரசின் அண்மை வெளியீடு அதிர்ச்சி அளிக்கின்றது என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவில், பல ஆண்டுகளாக, கிறிஸ்தவர்கள் கல்வித்துறையில் முன்னிலை வகித்துவரும்வேளை, பள்ளிக்குச் செல்லாத கிறிஸ்தவச் சிறாரின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுகின்றது மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்று, அருள்பணி ஜோசப் மணிப்பாடம்(Joseph Manipadam) அவர்கள் கூறினார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார ஆணையத்தின் செயலராகிய அருள்பணி மணிப்பாடம் அவர்கள் கூறுகையில், பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியுள்ள கிறிஸ்தவச் சிறாரில் அதிகமானவர்கள், பிற்படுத்தப்பட்ட இனத்தவர் என்று தெரிவித்தார்.

இந்தியாவில், 2014ம் ஆண்டில், 6 வயதுக்கும், 13 வயதுக்கும் உட்பட்ட ஏறத்தாழ 66 இலட்சம் மாணவர்கள், பள்ளிக்குச் செல்வதை இடையிலே நிறுத்தியிருந்தனர், இவர்களில் 45 இலட்சம் பேர், அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இச்சிறாரில், 62,698 மாணவர்கள், கிறிஸ்தவர்கள் என்று, இந்திய ஊடகம் ஒன்று, கடந்த செவ்வாயன்று அறிவித்தது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.