2016-05-20 16:28:00

இப்பூமியின் நலம், வேகமாக மோசமடைந்து வருகின்றது


மே,20,2016. இப்பூமியின் நலம், ஏற்கனவே நினைத்ததைவிட வேகமாக மோசமடைந்து வருகின்றதென்றும், இதன் நிலைமை மேலும் மோசமடைவதற்குமுன் அரசுகள் இப்போதே உடனடியாகச் செயலில் இறங்க வேண்டுமென்றும் ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கை ஒன்று வலியுறுத்தியுள்ளது.

கென்யாவின் நைரோபியில், வருகிற திங்களன்று தொடங்கும் ஐந்து நாள்(மே 23-27) ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டை முன்னிட்டு, உலகளாவிய சுற்றுச்சூழல் நிலை(GEO-6) குறித்து, ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து ஆறு தனிப்பட்ட அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக், மேற்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆப்ரிக்கா என ஆறு பகுதிகளாகப் பிரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நைரோபி மாநாட்டில், 1,203 அறிவியலாளர்கள், நூற்றுக்கணக்கான அறிவியல் நிறுவனங்கள் மற்றும் 160க்கும் மேற்பட்ட அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் பகுதி இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில், உலகில் இடம்பெற்றுள்ள இயற்கைப் பேரிடர்களில் ஏறத்தாழ 41 விழுக்காடு ஆசிய-பசிபிக் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.