2016-05-19 15:37:00

இலங்கை நிலச்சரிவில் சிக்கியோருக்கு காரித்தாஸ் பணி


மே,19,2016. இலங்கையில் அண்மையில் உருவாகியுள்ள வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பேரிடர்களைத் தொடர்ந்து, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு, யாழ்ப்பாணம், கண்டி, இரத்னபுரா ஆகிய இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்று காரித்தாஸ் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் உருவான மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகிய இயற்கை இடர்களைத் தொடர்ந்து, 3,50,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 35 பேர் இறந்துள்ளனர், வேறு 150க்கும் அதிகமானோரின் நிலை இன்னும் தெரியவில்லை என்ற விவரங்களை, ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் நிதி உதவியுடன், இலங்கை காரித்தாஸ் மேற்கொண்டு வரும் பணியால், தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தவர்கள் பலன் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

வெல்லம்பிட்டியா, சிங்கபுரா, கொடிக்கவட்ட ஆகிய இடங்களில், பாதிக்கப்பட்டோர், அப்பகுதிகளில் உள்ள பள்ளிகள், கோவில்கள், மற்றும் ஆலயங்களில் புகலிடம் அடைந்துள்ளனர் என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

அண்மையத் தகவல்களின்படி, 134 பேர் இறந்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளதென பிபிசி செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.