2016-05-18 15:54:00

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள், பிளஸ் 2 தேர்வில் வெற்றி


மே,18,2016. கோவை, திருப்பூர் மாவட்டங்களில், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றும் திட்டத்தின் வழியே மீட்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்ட 11 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இம் மாவட்டங்களில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் 9 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்படுகின்றனர்.

பின்னர் அவர்கள் சிறப்புப் பயிற்சி மையங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் கல்வி கற்றபின், முறை சார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர்.

இத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்களாக மீட்கப்பட்டு, பின்னர் படிப்பைத் தொடர்ந்த 13 பேர், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில், இச்செவ்வாயன்று வெளியான தேர்வு முடிவில், 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்களில் குறிப்பாக பொள்ளாச்சி நாச்சிமுத்துக்கவுண்டர் பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் படித்த எம்.தேவி என்ற இளம்பெண், 987 மதிப்பெண்களும், ஜி.சபரி என்ற இளையவர் 967 மதிப்பெண்களும், எம்.விஷ்ணுபிரபு என்ற இளையவர் 956 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு எழுதிய சிறைக் கைதிகளில், மாநில அளவில் முதலிடம் பெற்றவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பாபநாசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் அவர்கள், கடந்த 2014-ம் ஆண்டில் சிறையில் இருந்து படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி 417 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் அத்தேர்வு எழுதிய சிறை கைதிகளில் முதலிடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தற்போது பிளஸ் 2 தேர்வில் 1,084 மதிப்பெண் பெற்று, சிறை கைதிகளிடையே மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.