2016-05-18 15:46:00

மறைக்கல்வி உரை : இறைஇரக்கம் என்பது, பிறரன்போடு தொடர்புடையது


மே,18,2016. கோடைகால துவக்கத்தின் காலநிலையை உரோம் நகரம் அனுபவித்துக்கொண்டிருக்க, தூய பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, 'ஏழ்மையும் இரக்கமும்' என்ற தலைப்பில், தன் யூபிலி புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்புதன் மறைக்கல்வி உரை சந்திப்பின்போது, ‘உலகம் முழுவதும் அமைதிக்கான குழந்தைகளின் அமைப்பு’ என்ற குழுவைச் சேர்ந்த உக்ரைன் நாட்டின் 80 குழந்தைகளும், 20 பெரியோரும் கலந்துகொண்டனர். இப்புதனன்று தன் மறைக்கல்விப் போதனையில், 'இலாசரும் பணக்காரரும்' என்ற இயேசுவின் உவமை பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பணக்காரரின் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஏழை இலாசரோ, அந்தப் பணக்காரரின் சாப்பாட்டு மேசையிலிருந்து விழும் ரொட்டித் துண்டாவது தனக்குக் கிடைக்காதா என ஏங்குகிறார். இந்த உலகில் எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும், ஒரு புறம் செல்வச் செழிப்பையும், அதற்கு நேர்மாறாக, மறுபுறம் ஏழ்மையையும் காண்கிறோம். இத்தகைய முரண்பாட்டு நிலைகளின் முன், ஓர் ஏழையின் அழுகுரலைத்தான் இலாசர் இங்கு குறித்து நிற்கிறர். இந்த பணக்காரரும் இலாசரும் இறக்கும்போது, அவர்களின் நிலைகள் தலைகீழாக மாறிப்போகின்றன. 'கடவுள் உதவுகிறார்' என்ற பொருள்கொண்ட பெயருடைய இலாசரோ, ஆபிரகாமின் மடியில் உட்கார்ந்திருக்க, பணக்காரரோ படுகுழியில் தள்ளப்பட்டு தாகத்தால் ஒரு துளி தண்ணீருக்காக தவிக்கிறார். இறைவனின் நீதி எனும் மறையுண்மையில், இறைவனின் இரக்கம் என்பது, நாம் பிறருக்கு காட்டும் இரக்கத்தோடு தொடர்புடையது என்பதை ஆபிரகாம் அங்கு விளக்க வேண்டியிருந்தது. ஏழைகளின் தேவைக்கு தங்கள் இதயங்களை மூடுபவர்களுக்கு, வானுலகின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். மனமாற்றம் ஒன்றே இறைவனின் வார்த்தை, மற்றும், அது கொணரும் செய்திக்கு நம் இதயங்களைத் திறந்து வைக்க முடியும். அன்னை மரியின் புகழ்பாடலில் கூறப்பட்டுள்ளதுபோல், இறைவனின் இரக்கம் மற்றும் நீதியின் வெற்றியானது, இவ்வுலகின் நிலைகளைத் தலைகீழாய்ப் புரட்டிப் போடும் வல்லமை பெற்றது.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.