2016-05-18 15:29:00

மரணதண்டனையை புதுப்பிக்கும் முயற்சிக்கு ஆயர்கள் எதிர்ப்பு


மே,18,2016. வருகிற ஜூன் மாதம் 30ம் தேதி, பிலிப்பின்ஸ் நாட்டின் அரசுத் தலைவராக Rodrigo Duterte அவர்கள் பதவியேற்றபின், அந்நாட்டில் மரணதண்டனையை மீண்டும் கொணர்வதற்கு திட்டமிட்டிருப்பதை, அந்நாட்டு ஆயர்கள் வன்மையாக எதிர்த்துள்ளனர்.

வாழ்வின் மீது சக்தி கொண்டவர் இறைவன் ஒருவரே, அவர் மட்டுமே வாழ்வை அளிக்கவும் எடுத்துக்கொள்ளவும் சக்தி பெற்றவர் என்பதால், இறைவனைப் போல் செயல்பட வேறு யாருக்கும் உரிமையில்லை என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Ruperto Santos அவர்கள் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் விற்பனை, ஆயுதங்களை வாடகைக்கு கொடுத்தல் போன்ற குற்றங்களைச் செய்வோருக்கு தூக்குத் தண்டனை வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற பாராளு மன்றத்தை தான் கேட்டுக்கொள்ளப் போவதாக, புதிய அரசுத் தலைவர், Duterte அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டைக் கொண்டாடிவரும் இவ்வேளையில், கத்தோலிக்க நாடென அழைக்கப்படும் பிலிப்பின்ஸ் நாட்டில், மரணதண்டனை சட்டம் நிறைவேற்றப்படுவது பெரும் முரணாக உள்ளது என்று, லீப்பா உயர் மறைமாவட்டப் பேராயர், Ramon Arguelles அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.