2016-05-18 15:37:00

இது இரக்கத்தின் காலம்... – ஓங்கி அடிக்கும்போதே ஓசை எழுகிறது


ஒரு ஜென் குருவிடம் பல மாணவர்கள் பாடம் பயின்றுவந்தார்கள்.

ஒரு நாள்  ஒரு மூதாட்டி அவருடைய ஆசிரமத்துக்குள் கோபமாக நுழைந்து, ‘என் மகனும், அவனோட நண்பனும் ஒரே நாள்லதான் உங்க ஆசிரமத்துல சீடர்களாச் சேர்ந்தாங்க. ஆறு மாசமா ரெண்டு பேரும் ஒரேமாதிரிதான் படிக்கறாங்க. ஆனா இன்னிக்கு, என் மகனைவிட அவனோட நண்பன் அதிக அறிவாளியா இருக்கான், நிறைய விடயங்களைத் தெரிஞ்சுவெச்சிருக்கான், இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? என்று கூச்சல் போட ஆரம்பித்தார்.

‘என்ன அர்த்தம்? நீங்களே சொல்லுங்களேன்!’ என கேட்டார் ஜென் குரு.

’நீங்க உங்க மாணவர்கள் மத்தியில பாரபட்சம் காட்டறீங்க, ஒரு பையனுக்கு நல்லாச் சொல்லிக் கொடுத்துட்டு இன்னொரு பையனை ஒதுக்கிறீங்க!’ என்று குற்றஞ்சாட்டினார் அந்த மூதாட்டி.

ஜென் போதகர் சிரித்தார். ‘அம்மா, கோயில்ல ஒரு மணியைக் கட்டியிருக்கோம், அதை நீங்க மெதுவா அடிச்சா கொஞ்சமா சத்தம் கேட்கும், பலமா அடிச்சா ரொம்ப தூரத்துக்குக் கேட்கும். இல்லையா?’ என கேள்வி எழுப்பினார் குரு.

‘ஆமா, அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றார் மூதாட்டி.

‘குரு என்பவர், அந்த மணியைப்போலதான், மாணவன் எந்த அளவு அக்கறை எடுத்துக்கிட்டுப் படிக்கறானோ, அந்த அளவு அவனால அந்த குருவைப் பயன்படுத்திக்க முடியும், அவர்கிட்டேயிருந்து விடயங்களைக் கிரகிச்சுக்க முடியும், இதையெல்லாம் செய்யாம சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியும். புரியுதா?’ என கூறி அமைதியானார் ஜென் குரு. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.