2016-05-17 16:16:00

தென் கொரிய எழுத்தாளருக்கு மான் புக்கர் விருது


மே,17,2016. இலக்கிய உலகின் முன்னணி விருதுகளில் ஒன்றான மேன் புக்கர்(Man Booker) அனைத்துலக விருதை, தென் கொரிய எழுத்தாளர் ஒருவர் வென்றுள்ளார்.

“The Vegetarian” எனும் புதினத்துக்காக ஹான் காங் (Han Kang) அவர்களுக்கு, 2016ம் ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சராசரி கொரிய மனைவி ஒருவர், சைவ உணவுக்கு மாறுவதை அடிப்படையாகக் கொண்ட அந்தப் புதினம், மரபுரீதியாக வீடு, குடும்பம் மற்றும் சமூகத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ள கொரியப் பெண், அந்த மரபுகளை எப்படி எதிர்த்து போராடுகிறார் என்பதைக் கூறுகிறது.

புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்ட அந்தப் புதினம், துருக்கி நாட்டு நொபெல் இலக்கிய விருது எழுத்தாளர் Orhan Pamuk, அங்கோலா எழுத்தாளர் Jose Eduardo Agualusa, சீன எழுத்தாளர் Yan Lianke, இத்தாலிய எழுத்தாளர் Elena Ferrante, ஆஸ்ட்ரிய புதின எழுத்தாளர்  Robert Seethaler ஆகியோரின் படைப்புகளுடன் போட்டியிட்டது.

பிரிட்டனில் வழங்கப்படும், ஐம்பதாயிரம் பவுண்டு மதிப்புடைய இந்த விருதுத் தொகையை, ஹான் அவர்கள், மொழிபெயர்ப்பாளர் டெபோரா ஸ்மித் (Deborah Smith) அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்.

ஆதாரம் : பிபிசி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.