2016-05-17 15:30:00

கர்தினால் கோப்பா இறப்புக்கு திருத்தந்தை இரங்கல் தந்தி


மே,17,2016. இத்திங்கள் மாலை உரோம் நகரில் இறந்த, இத்தாலியக் கர்தினால் ஜொவான்னி கோப்பா அவர்களின் ஆன்மா நிறை சாந்தியடைவதற்கு, தனது செபத்தைத் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றை, கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால் கோப்பா அவர்கள், திருஅவைக்கும், திருப்பீடத்திற்கும் நீண்ட காலம் மிகுந்த திறமையோடும், அர்ப்பணிப்போடும், மனத்தாராளத்தோடும் ஆற்றிய பணிகளுக்கு, பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ள திருத்தந்தை, இக்கர்தினால் ஆறு திருத்தந்தையரோடு ஆற்றியுள்ள பணிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி தனது 90வது பிறந்த நாளைச் சிறப்பித்த கர்தினால் கோப்பா அவர்கள், இத்தாலியின் piemonte பகுதியில், ஆல்பாவில் பிறந்தார். 1949ம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1958ம் ஆண்டில் திருப்பீடச் செயலகத்தில் பணியைத் தொடங்கினார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில், இலத்தீன் மொழி நிபுணராக இவர் பங்கேற்றார். 1980ம் ஆண்டில் ஆயராகவும், 2007ம் ஆண்டில் கர்தினாலாகவும் இவர் உயர்த்தப்பட்டார்.

1990ம் ஆண்டில் செக்கோஸ்லோவாக்கிய திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்ட கர்தினால் கோப்பா அவர்கள், 2001ம் ஆண்டுவரை பிராக் நகரில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றினார். இவரின் அடக்கச் சடங்கு, மே 18, இப்புதன் மாலை 3 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும்.

கர்தினால் கோப்பா அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்கள் 214 ஆக உள்ளனர். இவர்களில் 114 பேர், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுள்ளவர்கள். மொத்த இத்தாலியக் கர்தினால்கள் 46. இவர்களில் 80 வயதுக்குட்பட்டவர்கள் 26 பேர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.