2016-05-17 16:03:00

உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில் சிறப்பு கல்வி நிதி


மே,17,2016. ஆயுத மோதல்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான சிறாருக்கு உதவுவதற்கு, அடுத்த வாரத்தில் தொடங்கவிருக்கும் உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில் சிறப்பு கல்வி நிதி உருவாக்கப்படும் என்று, ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில், வருகிற திங்கள், செவ்வாய் தினங்களில்(மே23,24) நடைபெறவிருக்கும் முதல் உலக மனிதாபிமான உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும், உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நாடுகளின் நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் சிறப்பு கல்வி நிதி ஒன்றை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்தார், கல்விக்கான ஐ.நா. சிறப்பு தூதர் கோர்டன் ப்ரௌன்.

1945ம் ஆண்டுக்குப் பின்னர், பெருமளவில் புலம்பெயர்ந்துள்ள மூன்று கோடிச் சிறாரின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன எனவும், இவர்களில், இரண்டு கோடிச் சிறார், தற்போது பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பில்லாமல் உள்ளனர் எனவும் தெரிவித்தார் ப்ரௌன்.

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் ஒன்பது இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை, தென் சூடானில் மூன்றில் ஒரு பகுதிச் சிறார்க்கு, கல்வி வாய்ப்பு கிடையாது மற்றும், நைஜீரியாவில் போக்கோ ஹாரம் அமைப்பு, ஐந்தாயிரம் பள்ளிகளை மூடியுள்ளது என்றும் ஐ.நா. கூறியது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.