2016-05-17 13:45:00

இது இரக்கத்தின் காலம் : கண்ணீரின் ரகசியம்....


கவிஞர் அப்துல் ரஹ்மான் அவர்களின் கவிதைகளில் ஒன்று, கண்ணீரின் இரகசியங்களை அழகுற சித்திரிக்கின்றது.

'இறைவா எனக்குப்

புன்னகைகளைக் கொடு’ என்று பிரார்த்தித்தேன்

அவன் கண்ணீரைத் தந்தான்

‘வரம் கேட்டேன்

சாபம் கொடுத்து விட்டாயே’ என்றேன்

இறைவன் கூறினான்:

மழை வேண்டாம்

விளைச்சலை மட்டும் கொடு என்று

எந்த உழவனாவது கேட்பானா

ஆனால் நீ

அப்படித்தான் கேட்கிறாய்

கண்ணீரில் புன்னகையும்

புன்னகையில் கண்ணீரும்

ஒளிந்திருப்பதை நீ அறிய மாட்டாய்

உண்மையைச் சொல்வதானால்

கண்ணீர் கண்களின் புன்னகை

புன்னகை இதழ்களின் கண்ணீர்

வைகறைப் பொழுதில் மலர்களின் மீது

பனித்துளிகளை நீ கண்டதில்லையா?

புன்னகை தன்னைக் கண்ணீரால்

அலங்கரித்துக் கொள்ளும்

அற்புதம் அல்லவா அது!

மழை மேகங்களில்

மின்னல் உதிப்பதை

நீ பார்த்ததில்லையா?

கண்ணீரில் இருந்து

சிரிப்புப் பிறக்கும்

அழகல்லவா அது?

முத்து என்பது என்ன?

சிப்பிக்குள் இருந்து

தவம் செய்யும் கண்ணீர்த் துளி

புன்னகையாகும் அதிசயம்தானே அது

கன்ணீரில் மலரும்

புன்னகைப் பூக்கள்

வாடுவதில்லை என்பதை

அறிவாயாக!

மேலும் கண்ணீர்தான்

உன்னைக் காட்டுகிறது

புன்னகையோ சில நேரங்களில்

உனக்கு திரையாகிவிடுகிறது

"கண்ணீர் என்ற கொடைக்காக கடவுளிடம் மன்றாடுங்கள்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வப்போது கூறி வருகிறார். கண்ணீர் சிந்தக்கூடிய அளவு, கனிவுள்ள மனதை நமக்குத் தரும்படி, இரக்கத்தின் காலத்தில் இறைவனை இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.