2016-05-17 15:49:00

அருள்பணியாளர்கள் ஏழைகளுக்கு ஏழைகளாய் இருப்பவர்கள்


மே,17,2016. அருள்பணியாளர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள், இவர்கள் ஏழைகளுக்கு ஏழைகளாய் இருப்பவர்கள் என்றும், இவர்கள் உலகாயுதப் பொருள்களைக் கொண்டிருப்பதோ, அல்லது அவற்றை அடையத் தேடுவதோ கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலிய ஆயர் பேரவையின்(Conferenza episcopale italiana, CEI) 69வது பொது அமர்வை, வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அரங்கில், இத்திங்கள் மாலை தொடங்கி வைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களின் புதுப்பித்தல் பற்றிய, இந்தப் பொது அமர்வின் தலைப்பு குறித்தே உரையாற்றினார்.

ஆண்டவருக்கும், திருஅவைக்கும், இறையாட்சிக்கும் சொந்தமானவர்களாய் இருப்பதே, அருள்பணியாளர்கள் வாழ்வை இனம்பிரித்துக் காட்டும் பண்புகளாகும் என்றும், இந்தப் பொக்கிஷத்தை, ஆயர்கள், பொறுமையோடு பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

அருள்பணியாளர்களும், தங்களின் பங்காக, நம்பகமான ஒரு வாழ்வை வாழ வேண்டுமெனவும், ஏழைகளோடு ஏழைகளாக இருக்க வேண்டும் மற்றும் தங்களின் மறைப்பணிக்கு முத்தியமல்லாதவைகளை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

எனது வாழ்வுக்கு மணம் கொடுப்பது எது? இத்தகைய அர்ப்பணிக்கப்பட்ட பணியை யாருக்கு மற்றும் எதற்காகச் செய்கின்றேன்? தன்னையே வழங்குவதன் முக்கிய நோக்கம் என்ன? போன்ற கேள்விகளை, அருள்பணியாளர்கள் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.