2016-05-16 16:35:00

வாரம் ஓர் அலசல் – வெற்றியின் இரகசியம்


மே,16,2016. யாருக்கு வெற்றி? யாருக்குத் தோல்வி? இதுதான் தேர்தல் காலங்களில் எல்லா நாடுகளிலும் பேச்சாக இருக்கிறது. இப்போது தமிழகம், அக்னி நட்சத்திர வெயிலில் தகிக்கிறதா? அல்லது அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியை, தமிழ்நாட்டு மக்களிடம் கேட்டால், அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்விக்கான பதிலையே உடனடியாகச் சொல்வார்கள். ஏனென்றால், பருவகாலத் தட்பவெப்பம் மாறும். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது. அன்பர்களே, அடுத்த முதலமைச்சர் யார்? இத்திங்களன்று, 232 தொகுதிகளிலும், வாக்காளர்கள், தங்கள் தீர்ப்புக்களைப் போட்டு விட்டார்கள். அத்தீர்ப்பின் முடிவு, 19ம் தேதி, வருகிற வியாழக்கிழமைதான் தெரியும். பொறுத்திருப்போம். அதேநேரம், எந்தக் கட்சி வெற்றி பெற்றால் எனக்கென்ன? என்று, அரசியல் பற்றிய எந்தச் சிந்தனையுமின்றி, தங்களின் அன்றாட வேலைகளில் ஆழ்ந்துவிடும் மக்களும் உள்ளனர். ஆனால், பொதுவாக, போட்டி என்று வந்துவிட்டால், வெற்றியும் தோல்வியும் நிச்சயம் உண்டு. படிப்போ, பதவியோ, தொழிலோ எந்தத் துறையிலும், வெற்றியும், தோல்வியும் உண்டு. நம் வாழ்வில் வெற்றியைவிட, நமக்கு ஏற்படும் தோல்விக்கே சக்தி அதிகம். ஏனென்றால் வெற்றி சிரிக்க வைக்கும், தோல்வி நம்மை சிந்தித்து வாழ வைக்கும் என, “எழுது” வலைத்தளத்தில் ஒருவர் பதிவு செய்திருந்தார்.

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே 17, இச்செவ்வாயன்றும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள், இம்மாதம் 25ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்திற்கு மறுநாள், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், காலை 10.31 மணி முதல், 11 மணிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், மே 25ம் தேதி காலை 9.31 மணி முதல், 10.00 மணிக்குள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 எழுதிய மாணவச் செல்வங்கள், தங்களின் உழைப்பின் பயனை அறிய, கடிகார முள்ளை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தேர்வுகளில் பலருக்கு வெற்றி, சிலருக்குத் தோல்வி. இந்தத் தோல்விகள்கூட விரைவில் சரிசெய்யப்படலாம். அன்பு நெஞ்சங்களே, நம் வாழ்வில், தோல்விகளையும், வேதனைகளையும் கண்டு துவண்டுவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைக்கும், எதிர்நீச்சலுக்கும் நம்மால் அடியெடுத்து வைக்க முடியாது. அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல, எதிர்பாராத ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அமைதியான கடல், திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. தோல்விகளையும், துன்பங்களையும் ஏணிப்படிகளாய் மாற்றியவர்களே வாழ்வில் வெற்றியெனும் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்கள்.

இரண்டு கால்களும் நலமுடன் இருப்பவர்க்கே, இமயமலை ஏறி, எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவது கடினமாக இருக்க, ஒரு செயற்கைக் காலுடன் எவரஸ்ட் சிகரம் தொட்டு  சாதனை படைத்திருக்கிறார் 2015ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற அருணிமா.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் 1988ம் ஆண்டில் பிறந்த அருணிமாவின் தந்தை, இராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். இவருக்கு ஓர் அக்கா, இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி. இவரது ஆறாவது வயதில் தந்தை மர்மமாக இறந்துவிட்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அண்ணன் கொல்லப்பட்டார். அவர்களின் குடும்பம் மனத்தளவில் சிதைந்து போனது. அச்சமயத்தில், இவரது அக்காவை, ஓம் பிரகாஷ் எனும் இராணுவ வீரர் திருமணம் செய்துகொண்டார். அவர் வந்த பிறகு, இவர்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பு கிடைத்துள்ளது. அருணிமா, பிறக்கும்போது ஒரு காலுடன் பிறக்கவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்பதை, ஊடகம் ஒன்றில் இப்படி அவர் விவரித்திருக்கிறார்

என் அக்கா கணவர், இன்னொரு பாசமுள்ள அப்பாவானார். அவர் தந்த ஊக்கத்தில், கால்பந்து, கைப்பந்து இரண்டிலுமே திறமையை வளர்த்துக் கொண்டேன். தேசிய அளவில் வாலிபால் வீராங்கனையாக உயர்ந்தேன். நான் பட்ட மேற்படிப்பை முடித்து சட்டமும் படித்தேன். மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் பதவித் தேர்வுக்கான அழைப்பு  கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் என் பிறந்த தேதி பிழையாக இருந்தது. அதைத் திருத்தி சரிசெய்ய டெல்லி போக வேண்டும். 2011ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி, லக்னோவின் சார்பக் இரயில் நிலையத்திலிருந்து, தனி ஆளாக டெல்லிக்குப் புறப்பட்டேன். இரயிலில் நிற்கக்கூட இடம் இல்லை. கழிவறையருகில் ஒடுங்கி அமர்ந்திருந்தேன். பையில்,  செல்போன், சான்றிதழ்கள், கழுத்தில் தங்கச்சங்கிலி. அந்த நெரிசலில்,  நான்கைந்து முரடர்கள், என்னை நெருங்கி வந்து தங்கச் சங்கிலியை  பறிக்க முற்பட்டனர். அந்த ரவுடிகளோடு நான் நடத்திய போராட்டத்தில், இரயில் பெட்டியின் கதவுவரை வந்துவிட்டேன், ஒருவன் முழு பலத்துடன் என்னை காலால் உதைத்துத் தள்ள... வெளியே தெறித்து வீழ்ந்தேன். விழுந்த இடம் இன்னொரு இரயில் தடம். கருங்கற்களில் மோதியதால், மயக்கமானேன். அதனால் அடுத்து  வந்த  இரயில்  என் இடது காலைத் துண்டித்துச் சென்றது. அந்த இரவில், நான் கிடந்த தடத்தில், பத்துப் பதினைந்து இரயில் வண்டிகள் கடந்து போயிருக்கும். மனிதக் கழிவுகள் என்மேல் வந்து விழுந்தன. வலது காலிலும் பலத்த அடி. என்னால் அசைய  முடியவில்லை. விடியும் வரை தடத்திலேயே கிடந்தேன். காலையில் அந்தப்பக்கம் வந்தவர்கள் எனது அலங்கோலத்தைப் பார்த்து பக்கத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். மயக்க மருந்து தரக்கூட வசதி இல்லாத அந்த மருத்துவமனையில், இடது காலின் முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியை வெட்டி அகற்றினார்கள். எல்லாம் என் கண் முன் நடந்தது. உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அகிலேஷ் யாதவ் எனக்கு நேர்ந்த துயரத்தை அறிந்து என்னை வந்து பார்த்து, ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவி செய்தார். என் நிலை அறிந்த சோனியா காந்தி,  மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கார் அவர்களை, என்னைப் பார்க்க அனுப்பி வைத்தார். அஜய், என்னை விமான அவசர சகிச்சை வாகனத்தில் லக்னோவிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எய்ம்ஸில் எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டானது. எய்ம்ஸில் எனக்கான செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பிறகு எதையும் பிடிக்காமல் நடக்கும் அளவிற்கு முன்னேறினேன். என் அக்கா கணவர் ஓம் பிரகாஷ் என்னிடம் சொன்னார்: "அருணிமா, மாற்றுத்திறனாளி யாரும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதில்லை. அந்தப் பெருமையை அடையும் முதல் பெண்ணாக நீ ஏன் இருக்கக் கூடாது'' என்றார். மனதில் உறுதி வந்தது. எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பாலை (Bachendri Pal), ஜாம்ஷெட்பூரில் சந்தித்தேன். நிச்சயம் நீ வெல்வாய்.. என்று ஆசிர்வதித்ததுடன் உத்தர்காசியில் செயல்படும் டாடா ஸ்டீல் ஃபவுண்டேஷனில் எனக்கு மலையேற்றப் பயிற்சிக்கு இடம் வாங்கிக் கொடுத்தார். எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியின் முதல் இலக்கு ஐஸ்லாண்ட் பீக் (Island Peak or Imja Tse 6189m.) என்னும் மலைஉச்சியை அடைவதுதான். இந்த மலை உச்சி கடல் மட்டத்திலிருந்து 6189 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த உச்சியை அடைந்து விட்டால், கிட்டத்தட்ட எவரெஸ்ட் மடியில் கால் வைப்பது போலாகிவிடும். கடுங்குளிர் உயிரை உலுக்க... உயிரைக் கையில் பிடித்தபடி நான் மலை ஏற... செயற்கைக்கால் கொண்டு பனிப் பாறைகளில் பாதுகாப்பாகக் கால் ஊன்ற முடியவில்லை. திடீரென்று,  செயற்கைக் கால் திசை திரும்பியது. உடல் பாரம் தாங்க முடியாமல் செயற்கைக் காலின் பொருத்தம் விடத் தொடங்கியிருக்க வேண்டும்.  அடுத்த அடி எடுத்து வைப்பது இமாலய முயற்சியாக அமைந்தது. மனமெல்லாம் எவரெஸ்ட் நிறைந்திருந்ததால், இடது காலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு பெரிதாகப் படவில்லை. ஐஸ்லாண்ட் சிகம் ஏறியாகி விட்டது. நான் பட்ட பாட்டைக் கண்ட என் குழுவினர், "அருணிமா, இந்த மலை உச்சிக்கு வந்த முதல் மாற்றுத் திறனாளி நீதான்... இதுவே உலக சாதனைதான். இனியும் உயிருடன் விளையாட வேண்டாம்'  என்றார்கள். என்னை இந்த அளவுக்கு உயர்த்திய வளர்ப்பு அப்பா ஓம் பிரகாஷின் இலட்சியக் கனவே நான் எவரெஸ்ட் சிகரம் ஏறி தேசியக் கொடியை விரித்து நிற்க வேண்டும் என்பது. அதை நனவாக்காமல் நான் திரும்ப மாட்டேன்' என்று தீர்மானமாகச் சொன்னேன். மரணப் போராட்டம் நடத்தி கடைசியில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தேன். தேசியக் கொடியை விரித்துப் பிடித்து, புகைப்படம் வீடியோ எடுத்துக் கொண்டேன். அந்த வேளையில் நான் புதிதாய்ப் பிறந்தேன்.

அன்பு நெஞ்சங்களே, மாற்றுத்திறனாளி பத்மஸ்ரீ அருணிமா அவர்களின் வாழ்வு, நமக்கு நல்லதோர் உந்துசக்தி. துன்பம் என்பது வெற்றியின் படிக்கட்டு. வாழ்வில், முயற்சியில்லாமல் நல்ல திருப்பங்கள் ஏற்படுவதில்லை.

அன்பர்களே, 1831ல் வர்த்தகத்தில் தோல்வி, 1832ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி, 1834ல் வர்த்தகத்தில் மீண்டும் தோல்வி, 1835ல் காதலியின் மரணம், 1836ல் நரம்பு சார்ந்த நோய், 1838ல் தேர்தலில் தோல்வி, 1843ல் காங்கிரஸ் அவைத் தேர்தலில் தோல்வி, 1848ல் காங்கிரஸ் அவைத் தேர்தலில் மீண்டும் தோல்வி, 1855ல் செனட் அவைத் தேர்தலில் தோல்வி, 1856ல் உதவி அரசுத்தலைவர் தேர்தலில் தோல்வி, 1858ல், செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி, 1861ல் அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி. இத்தனை தோல்விகளைச் சந்தித்தவர்தான், உலகில் மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க முன்னாள் அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன். இவரைப்போல் தோல்விகளைச் சந்தித்தவர் இருக்க முடியாது. அதிகத் தோல்விகள், அதிகப் பாடங்கள். அவையே வெற்றியின் இரகசியம். ஆம். தோல்வி வந்தவுடன், இனி முடியாது என்று எதிர்மறையாகச் சிந்திப்பதைத் தவிர்த்து, மேலும் முயற்சி செய்வேன் என்று முடிவுசெய்து, ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பவர்கள், உழைப்பவர்கள், வாழ்வில் சிகரம் தொடுகிறார்கள். தோல்வி, துன்பம் இவை சிந்தித்து வாழ வைக்கும். இதுவே வெற்றியின் இரகசியம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.